மேலும்

ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?

maithri-reportமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்வரும், பெப்ரவரி 10ஆம் நாள், உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டால், அதன் உள்ளடக்கங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னமும் இரகசியமாக பாதுகாக்கப்படும் அறிக்கையில், மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்று குறைந்தபட்சம் ஒன்பது அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஊகங்கள் உலாவுகின்றன. எனினும், இதனை சுதந்திரமான உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் இந்த பிணைமுறி மோசடி மூலம் சட்டவிரோதமாக பில்லியன்கணக்கான நிதி ஆதாயத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாகவும் இந்த அறிக்கையில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் கொள்ளுப்பிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாளுக்கு முன்னதாக பகிரங்கப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் இந்த அறிக்கையை உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில மூத்த அமைச்சர்கள் வலுவாக நம்புகின்றனர் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *