மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – இரண்டாவது கட்டத்தில் 1553 வேட்புமனுக்கள் ஏற்பு

Srilanka-Electionஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது கட்டமாக 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக, 93 உள்ளூராட்சி சபைகளுக்கு கடந்த 11ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதன்போது, அரசியல் கட்சிகளால் 466 வேட்புமனுக்களும், சுயேட்சைக் குழுக்களால் 57 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் அரசியல் கட்சிகளின் 19 வேட்புமனுக்களும், சுயேட்சைக் குழுக்களின் 4 வேட்பமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, 248 உள்ளூராட்சி சபைகளுக்கு, இரண்டாவது கட்ட வேட்புமனுத் தாக்கல் நேற்றுமுன்தினம் நண்பகலுடன் முடிவடைந்தது.

இதன்போது, அரசியல் கட்சிகளின் சார்பில் 1399 வேட்புமனுக்களும், சுயேட்சைக் குழுக்களினால் 183 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 29 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிகபட்சமாக, இரண்டு கட்டங்களின் போதும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதேவேளை, சிறிலங்காவில் உள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

வாக்களிப்பு முடிந்ததும், உடனடியாக வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *