மேலும்

கோத்தாவின் திடீர் முடிவினால் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா இழப்பு – விசாரணைக்கு நடவடிக்கை?

gotabhayaபாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பு நகரில் இருந்து அகற்றும்- முன்னைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத – திடீர் முடிவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் வாடகைக்குப் பெற்றுள்ள 15 கட்டடங்களுக்காக ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபாவை வாடகைக் கொடுப்பனவாக வழங்க வேண்டியுள்ளது.

அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டதாக, அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

”பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றுவது தொடர்பாக பொருத்தமாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் பாதுகாப்புத் தலைமையகங்களினால் 15 கட்டடங்களை பெருமளவு பணத்துக்கு தற்காலிகமாக வாடகைக்கு பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பில் இருந்து அகற்றும் முடிவு விசாரிக்கப்பட வேண்டியதொரு விடயம்.

பொதுமக்களுக்கு பெரும் நிதி இழப்புக்களை ஏற்படுத்தும் முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட இதுபோன்ற முடிவுகள் குறித்து விசாரிக்க ஒரு அதிபர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு பல அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர்.

காலிமுகத்திடலில் சங்ரிலா நிறுவனத்துக்கு விற்கப்பட்ட காணியின் மூலம் பெறப்பட்ட 125 மில்லியன் டொலர் நிதி, பத்தரமுல்லவில் பென்டகன் பாணியிலான பாதுகாப்புத் தலைமையக வளாகத்தை அமைப்பதற்காக மத்திய வங்கியில் சிறப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

அந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை. முன்னைய அரசாங்கத்தினால் அது விற்கப்பட்டது.

பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றும் முடிவு ஏன் திடீரென எடுக்கப்பட்டது. இது விசாரிக்கப்பட வேண்டியது. இந்த முடிவு மோசமானதொன்று.

கொழும்பு நகருக்குப் பாதுகாப்பு வழங்க பாதுகாப்புத் தலைமையகங்கள் அவசியமானது. ஆனால் பாதுகாப்பு தலைமையகங்களை கொழும்பில் இருந்து அகற்ற ஏன் திடீர் முடிவு எடுக்கப்பட்டது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றும் முடிவை எடுத்திருந்தார்.

இந்த முடிவினால் ஏற்பட்டுள்ள இழப்புகளை கருத்தில் கொண்டு, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *