மேலும்

மைத்திரிக்கு மகிந்த அனுப்பிய புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு

mahinda-maithripalaஉள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிரணியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்த நிலையில்,புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றுக்கான வரைவு,  மகிந்த ராஜபக்சவினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச்  செய்தியை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகனும், தென்மாகாணசபை உறுப்பினருமான பிரசந்த யாப்பா அபேவர்த்தனவின் திருமணத்தில், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒன்றாகப் பங்கேற்று, திருமண சாட்சிக் கையொப்பமிட்டிருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் இவர்கள் அருகருகே அமர்ந்திருந்து உரையாடினர்.

இந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில், நாடாளுமன்ற வளாகத்தில் நாமல் ராஜபக்சவும், அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்தொடர்ச்சியாகவே, நேற்றிரவு கூட்டு எதிரணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்று மகிந்த ராஜபக்சவினால், மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவுக்கு சிறிலங்கா அதிபர் இன்னமும் பதில் எதையும் அளிக்கவில்லை.

இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்த பேச்சுக்கள் தொடங்கப்பட்டதையடுத்து, கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் கோத்தாபய ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *