மேலும்

வடக்கு, கிழக்கில் கட்டுப்பணம் செலுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரம்

sampanthan-dipositவடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

உள்ளூராட்சி சபைகளுக்கு இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பணியகங்களில் கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில், அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, கட்டுப்பணம் செலுத்தி தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நேற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்கான, தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளார்.

sampanthan-diposit

மட்டக்களப்பில், முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் இன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள, மன்னார் நகர சபை மற்றும், மன்னார், நானாட்டான், முசலி,  மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து  பிரதேச சபைகளுக்கும்  போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று  மன்னார்  மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான கட்சியின் பிரமுகர்கள்  இன்று  மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

அதேவேளை, சாவகச்சேரி தவிர, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈபிடிபி நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக, ஈபிடிபி இன்று முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் பணியகத்தில், கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அதேவேளை, முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளில் உள்ள வடக்கிலுள்ள ஒரே உள்ளூராட்சி சபையான சாவகச்சேரி நகரசபைக்குப் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இன்று கட்டுப்பணம் செலுத்தியது.

சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஎல்லை வரும் 13ஆம் நாளுடன் முடிவடையவுள்ள நிலையிலும், வரும் 14ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையிலும், இதுவரை 7 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *