மேலும்

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஏற்கத் தயாராகிறது கூட்டமைப்பு

sumanthiranபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமான, இடைக்கால அறிக்கை தொடர்பான அரசியலமைப்பு பேரவையின் விவாதத்தில் எதிர்க்கட்சி தரப்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“வரலாற்றில் முதன் முறையாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் பங்குபற்றியுள்ளன.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் எதிரணி அதனை எதிர்த்துள்ளது. இரு பிரதான கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவும், நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கவும், புதிய அரசியலமைப்பை உருவாக்கவும் 91 வீதமான மக்கள் 2015ல் வாக்களித்தனர்.

தாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆண்டு காலத்தில் அரசியலமைப்பை மாற்றுவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார். இன்று புதிய அரசியலமைப்புக்கு  அவரின் தரப்பே எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை புதிய அரசியலமைப்பிலும்,  உள்ளடக்க விரும்பினால் நாம் அதனை எதிர்க்கவில்லை.

‘ஒருமித்த நாடு’  என்ற சொற்பதத்தினால் நாடு பிளவுபடும் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

‘ஏக்கிய ராஜிய’ என்ற சொல்லுக்கு ‘ஒரு மித்த நாடு,  ஒரே நாடு என்று தான் பொருள்படுகிறது. பிரிக்க முடியாத பிளவுபட முடியாத நாடு என்ற விளக்கமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவே சமஷ்டி பற்றி முதலில் யோசனை முன்வைத்தார். இலங்கை ஒரு சமஷ்டி அரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி 6 கடிதங்களை அவர் நாளிதழ்களுக்கு அனுப்பியிருந்தார்.

இடதுசாரி கட்சிகள், இலங்கை சமஷ்டி நாடாக இருக்க வேண்டும் என ஆரம்ப முதல் கோரி வந்தன. டொனமூர் ஆணைக்குழுவில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒரு அலகாக இருக்க வேண்டும் எனவும் அதில் யோசனை முன்வைக்கப்பட்டது.

சமஷ்டி யோசனை நாட்டை பிரிக்கும் தீர்வல்ல. ஒருமித்த நாடாக செயற்பட சமஷ்டி ஆட்சி அவசியமாகும். இது பல்லின மக்களை கொண்ட நாடு. கூடியளவு அதிகாரம் பகிரப்பட  வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் அரசில் பங்கிருக்க வேண்டும். பெரும்பான்மையினர் மட்டும் இறைமையைப் பயன்படுத்த முடியாது. நாம் இரண்டாம் தரக் குடிமக்கள் அல்ல.

நாம் இலங்கையர் என்பது குறித்து பெருமைப்படுகிறோம். நாம் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் அவுஸ்திரேலிய தமிழர், கனேடிய தமிழர் என்று தான் தங்களை அழைக்கின்றனர்.

ஆட்சிக் கட்டமைப்பில் உரிய பங்கு கிடைக்க வேண்டும். 7 முதலமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் அதிகார பகிர்வு பற்றி யோசனை முன்வைத்துள்ளனர்.

13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது புறக்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி போராட்டம் நடத்தியது. நாடு பிரிக்கப்படப் போவதாக அவர்கள் போராடினர். மகிந்த ராஜபக்ச முன்நின்று போராடினார்.  அதிபராக இருந்தபோது அவர் 13இற்கும் அதிகமாக தருவதாக கூறினார்.

மாகாணசபையினால் நாடு பிரியும் என்றவர்கள் இன்று மாகாண சபையை நடத்துமாறு கோருகின்றனர். மாகாண சபை முறையினால் நாடு பிரிக்கப்பட்டுள்ளதா?

பொதுஜன ஐக்கிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைக்கு அன்றைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இலங்கை பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு என அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த அமைச்சரவையில் மகிந்த ராஜபக்சவும் இருந்தார்.

உத்தேச அரசியலமைப்பில் ஒருமித்த நாடு என்று நாட்டின் தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்தபோது வரைவு சட்டமூலமொன்றை அங்கீகரித்தீர்கள். தற்போதைய இடைக்கால அறிக்கையை விட கூடுதல் அதிகார யோசனைகள் அதில் உள்வாங்கப்பட்டிருந்தது.

வேறு எந்த பிரச்சினையையும் விட தேசிய பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஒருகால கட்டத்தில் நாட்டின் ஒரு பகுதி வேறு நபர்களினால் ஆளப்பட்டது.

பிரிக்க முடியாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத் தான் எமது மக்கள் எமக்கு பெரும்பான்மை வாக்குகளை வழங்கினர்.

நியாயமான தீர்வு முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்குமாறு எமது மக்களை கோர முடியும்.

பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் நாட்டின் எதிர்கால நலனுக்காக இப்பிரதான கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதனை ஏற்க தயாராக உள்ளோம்.

எதிர்கால சந்ததியை துன்பத்தில் தள்ளாதீர்கள். அனைவரது யோசனைகளையும் பெற்று, ஒரு தரப்பாக அனைவரும் செயற்படக்கூடிய தீர்வுக்கு செல்ல வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *