மேலும்

தன்னாட்சியை கொடுப்பதை விட தமிழரை அதிபராக, பிரதமராக ஏற்கலாம்- கோத்தாவின் அமைப்பு

Abeytissa Theraஇனரீதியாக நாட்டைப் பிரிப்பதை விட, தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ பதவியில் இருப்பது மேல் என்று எலிய அமைப்பைச் சேர்ந்த, வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான எலிய என்ற அமைப்பு புதிய அரசியலமைப்புக்கு எதிராக, தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று தேசிய நூலக ஆவண நிலையத்தில் ஊடகச் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

அங்கு உரையாற்றிய வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தன்னாட்சி உரிமையை கொடுப்பதை விட, தமிழ் பேசும் அதிபர், பிரதமரை நியமிப்பதில் காலதாமதம் இன்றி கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் கேட்டுக் கொண்டார்.

‘புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது என்ற போர்வையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முற்படுகிறது.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் கூட்டாட்சி அம்சங்களுடன், புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் முனைகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை நிறுத்தவோ, பின்நோக்கிச் செல்லவோ விரும்பவில்லை.

தமக்கு சரியான இடம் வழங்கப்படாமையினால் வடக்கிலுள்ள மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

நாட்டைப் பிரிக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது.  அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில், கூட்டு எதிரணி கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

தமிழர்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், அபிவிருத்தியிலும் பெரும் பங்களித்திருக்கிறார்கள். நாட்டில் தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ இருப்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விடயம் அல்ல.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் லக்ஸ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்து பெரும் பங்களிப்பை வழங்கினார்.

எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு மாகாணங்களை இணைத்து, நாட்டின் மூன்றில் இரண்டு கடலோரப் பகுதியை ஒரே சமூகத்தினரிடம் வழங்கும் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசியப் பிரச்சினைக்கு சிறிலங்கா தீர்வு காண முடியாமல் இருப்பதற்குக் காரணம், ஒரு பகுதி மக்கள் இன்னமும் ஈழம் திட்டத்தை கைவிடாமல் இருப்பது தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுனரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் உரையாற்றியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *