மேலும்

சிறிலங்காவுடனான பேச்சுக்களில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது பாகிஸ்தான்

srilanka-pakitan-talksபாகிஸ்தான் – சிறிலங்கா இடையிலான வெளிவிவகாரச் செயலர்கள் மட்டத்திலான, ஐந்தாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்களின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதில் பங்கேற்ற சிறிலங்கா குழுவுக்கு, வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும், பாகிஸ்தான் குழுவுக்கு, அந்த நாட்டின் வெளிவிவகாரச் செயலர் தஹ்மினா ஜன்ஜூனாவும் தலைமை தாங்கினர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,“ பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா துறைகளிலும்,இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, விஞ்ஞானம்தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா, ஆற்றலைக் கட்டியெழுப்புதல், குடிவரவு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

srilanka-pakitan-talks

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடுகள், புரிந்துணர்வு உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க, கூட்டுப் பணிக் குழுக்களை உருவாக்கவும் இருதரப்பும் இணங்கியுள்ளன.

சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் இருநாடுகளும் இணங்கியுள்ளன.

இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரில், அப்பாவி காஷ்மீர் மக்களுக்கு எதிராக,  இந்திய ஆக்கிரமிப்புப் படைகள், மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாக, பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த கொடுமைகளை நிறுத்துமாறும்,  ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு அமைய, ஜம்மு- காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா – பாகிஸ்தான் இடையிலான அடுத்த அரசியல் கலந்துரையாடலை 2018 ஒக்ரோபரில் இஸ்லாமாபாத் நகரில் நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *