மேலும்

வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு – டோறாவுக்குப் பதில் பீரங்கிப் படகுகள்

Vice Admiral Travis Sinniahகடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

“கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் வடக்கில் கடற்படையின் நிலைப்படுத்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் நடவடிக்கைகள் அங்கு பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பகுதிகளில் இருந்து எமது படகுகளை, எடுத்து, எல்லையில் குவித்துள்ளோம். வடக்கில் பயன்படுத்தப்படும் படகுகளின் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகத் தாக்குதல் படகுகளுக்குப் பதிலாக,  அதிவேகப் பீரங்கிப் படகுகளை நிறுத்தியுள்ளோம்.

இவை பெரிய, மற்றும் கனமான அடித்தளங்களைக் கொண்டவை. இத்தகைய நடவடிக்கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டவை.

எமது நடவடிக்கைகள் முன்னரைப் போல இரகசியமானவையாக இல்லை. வெளிப்படைத்தன்மையும், பார்க்கக் கூடியதாகவும் உள்ளன.

முன்னைய முறை தவறானது. போரின் போது வேண்டுமானால் இரகசிய முறைகளைக் கடைப்பிடிக்கலாம். போருக்குப் பின்னர் அவை அவசியமற்றவை.

நாங்கள் சிறிலங்காவின் கடல் எல்லையில் இருக்கிறோம். அனைத்துலக கடல் எல்லையைப் பாதுகாக்கும் எம்மை யாரும் அவதானிக்க வேண்டும்.

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை தடுப்பதற்கான அணுமுறையில் இது ஒரு பெரிய வித்தியாசம்.

கைது செய்து துன்புறுத்தும் முறைக்குப் பதிலாக, எச்சரித்து தடுக்கும் முறையை பயன்படுத்தும் முறைக்கு மாறியிருக்கிறது கடற்படை.

சிறிலங்கா கடற்படை தனது உபாயத்தை மாற்றியதை அடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் வருவதை குறைத்துக் கொண்டு கேரள, ஆந்திர கடல்பகுதியை நோக்கிச் செல்கின்றனர்.

இது எமது திட்டம் 100 வீதம் வெற்றியடைந்துள்ளதைக் காட்டுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *