மேலும்

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா

us-lanka navy-ex (2)சிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன.

அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் 23வது தடவையாக இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் சிறிலங்காவுடன் முதன் முதலாக இவ்வாண்டே இப்பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சில ஆசிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இரு தரப்பு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பயிற்சி நடவடிக்கையானது அமெரிக்கப் படையினருக்கும் மற்றைய நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆளணிகளுக்கிடையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வழியை மேலும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

குறிப்பாக இராணுவ நடவடிக்கைத் திட்டமிடல், கட்டளையிடல் மற்றும் கட்டுப்படுத்தல், மூலோபாயங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் அமெரிக்கப் படையினருக்கும் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்காகும். இந்த வகையில் இத்தடவை சிறிலங்க இராணுவத்துடன் நல்லுறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

சிலரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைப் போல, சிறிலங்காவில் வாழும் சமூகத்தவர்கள் மத்தியில் இராணுவமயமாக்கலை ஊக்குவித்தல் அல்லது உறுதிப்படுத்தும் நோக்குடன் இக்கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்காவைத் தனது நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.

ஏனெனில் சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவை விருத்தி செய்வதற்கான முயற்சியில்  ஈடுபடுவதால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவே தற்போது அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது கணிசமானளவு இராணுவ அல்லது பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் சீனாவுடன் நெருக்கமான இராணுவ உறவை விரிவுபடுத்த வேண்டிய நிலையேற்படும்.

us-lanka navy-ex (1)

ஆகஸ்ட் 01 அன்று சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவு விழாவிற்காக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘சீன இராணுவமானது சிறிலங்கா இராணுவத்துடன் உறவைக் கட்டியெழுப்புவதில் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. இராணுவக் கற்கைநெறிகள், இராணுவப் பயிற்சிகள், கடற்பாதுகாப்பு போன்றன உள்ளடங்கலாக சீனா மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் தமக்கிடையே முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சீனா ஆர்வமாக உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை ஒரு பொருளாதார நோக்கமாக எப்போதும் விபரிக்கின்ற போதிலும், சீனாவின் பாதுகாப்பு மூலோபாயங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் சீனாவின் இத்திட்டமானது முற்றிலும் தேசிய பாதுகாப்பு எண்ணக்கருவை நோக்காகக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கும் மேலாக, சீனா தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களை தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாகச் செயற்படுத்த விரும்பவில்லை எனின், இது புதிய பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும். ஒரு நாட்டின் பொருளாதார செல்வாக்கானது பிறநாடுகளில் விரிவுபடுத்துவதற்கு தன்னால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் நிச்சயமானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

ஏனைய நாடுகள் மீதான சீனாவின் செயற்பாடுகள் சீனாவின் பாதுகாப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீனாவின் வெளிநாட்டு இராணுவச் செயற்பாடுகள் 2000 தொடக்கம் அதிகரித்துள்ளது. 2004ல், சீன அதிபர் கூ ஜின்ரவோ சீனாவின் ‘அனைத்துலக நலன்கள்’ தொடர்பாக முதன்மைப்படுத்தியிருந்தார். இதில் வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள், சீன நிறுவனங்கள், கம்பனிகள், முதலீடுகள், மூலோபாய கடல் வழிப்பாதைகள் மற்றும் வெளிநாடுகளுடனான தொடர்பாடல் வழிகள், சக்தி மற்றும் வளங்கள் போன்றன பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்துவதே சீனாவின் அனைத்துலக நலன்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

us-marrine-school

தற்போது இவை சீனாவின் அனைத்துலக அடிப்படை பொருளாதார நலன்களாக உள்ளன. எனினும் சீனா அனைத்துலக நாடுகளில் தனது அரசியல் மற்றும் இராணுவ நலன்களை விரிவுபடுத்துவதற்கான சான்றுகளும் உள்ளன. இவை சீனாவின் தேசிய நலன்களின் ஒருங்கிணைந்த கூறாக உள்ளது என சீனாவின் பாதுகாப்பு ஊடகமானது 2013ல் குறிப்பிட்டிருந்தது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாயப் பணிகளில் ஒன்றாக சீனாவின் அனைத்துலக நலன்களைப் பாதுகாத்தல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சீனாவின் இராணுவ மூலோபாயம் 2015ல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது புதிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது சீனாவின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராணுவ நலன்களைக் கொண்டுள்ளது. அனைத்துலக நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபடப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனா தனது பங்காளி நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்பு முறைகளின் ஊடாகப் பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளின் ஊடாக சீனாவானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாக சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. இதில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில் சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கை முறியடிப்பதற்காகவே தற்போது அமெரிக்கா கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. அமெரிக்கா தனது படை வீரர்களின் அதிக மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை சிறிலங்காவில் வாழும் பொதுமக்களுக்கு காண்பிக்க விரும்பியது என்பதற்கான சாட்சியமும் உள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட கூட்டுப்பயிற்சி தொடர்பான ஒளிப்படங்களில் அமெரிக்க வீரர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

chinese aid (2)

ஆனால் ஆப்கானிஸ்தானில் அல்லது ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தொடர்பான ஒளிப்படங்கள் அவர்கள் அறிவியல் புனைகதைகளில் வரும் படைவீரர்கள் போல் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அதாவது இந்த வீரர்கள் கறுப்புக்கண்ணாடிகள் அணிந்தவாறு உயர் ரக யுத்த ஆயுதங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இலங்கையர்களின் மனங்களை வெல்வதற்காகவே திருகோணமலையில் இடம்பெற்ற 2017 கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்களின் ஒளிப்படங்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்கின்ற வெளிப்பாட்டின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் மத்தியில் நிலவும் அமெரிக்கர்கள் தொடர்பான ஆழமான விரோதம் மற்றும் அவநம்பிக்கை போன்றவற்றை அமெரிக்காவால் மீண்டும் வெல்ல முடியும் என நான் நம்பவில்லை.

ஆனால் சீனர்கள் பல இயற்கையான நல்வாய்ப்புக்களைக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, கீச்சகத்தில், சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை விமர்சிக்காதவர்களுடன் சீனர்கள் சிறந்த தொடர்பைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவானது சீனாவுடனான நீண்ட நாள்  ஆட்டத்தைத் தொடர்வதில் தனக்கு பொறுமையில்லை என்பதைத் தொடர்ந்தும் காண்பித்து வருகிறது.

ஆனால் அமெரிக்கா தனது ஆட்டத்தை சிறிலங்காவில் சரியாக ஆடினால் அமெரிக்கா தனக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை யார் அறிவார்கள்?

ஆங்கலத்தில்  – Rathindra Kuruwita
வழிமூலம்        – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>