மேலும்

தேரவாத இராசதந்திரம் வளர்கிறது

Ronhigyaஇங்கிலாந்து ஒக்ஸ்போட் கல்லூரியில் படித்து நோபல் பரிசு பெற்றவர்களது உருவப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பது வழக்கம்.  அவ்வாறு வைக்கப்பட்ட படங்களில் இருந்து அந்த கல்லூரியின் பழைய மாணவி பர்மிய அரசியல் தலைவர் ஓன் சான் சூகி அவர்களின் உருவப்படத்தை நீக்கி களஞ்சியத்தினுள் வைத்து விட்டது அந்த கல்லூரி நிர்வாகம்.

மியான்மரில் ரொகின்யா மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதும் அரசியல் ரீதியாக அவர்கள் கையாளப்படும் விடயம் குறித்தும் சர்வதேச நாடுகள் மத்தியில் இருந்து கண்டன அறிக்கைகள் கிளம்பி இருக்கும் நிலையில், மியான்மரின் பிரதான அரசியல் தலைவரான ஒன் சான் சூகியின் உருவப்படத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பார்வையாளர் மண்டபத்திலிருந்து நீக்கி விட்டது.

சிறீலங்காவைப் போல தேரவாத பௌத்த நாடுகளில் ஒன்றான மியான்மரில் பெளத்த சமயத்தின் தலையீடு அரசியலில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அங்கமாக உள்ளது.  மன்னர் ஆட்சிக்காலத்திலும் காலனித்துவ காலத்திலும் வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த இஸ்லாமிய மதத்தை தழுவும் ரொகின்யா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை பௌத்த அடிப்படைவாதிகள் தடுத்து வருகின்றனர்.

பௌத்த மதத்தின் செல்வாக்கு அரசியல்பலத்தை தீர்மானிப்பதாக இருப்பதால் உள்நாட்டு அரசியலில் எந்தவித தீர்மானங்களையும் எடுப்பதற்கு  ஒன் சான் சூகியின் தேசிய சனநாயக கட்சி அரசாங்கம் தயங்கி வருவதாக மேலைத்தேய சிந்தனை குழு ஒன்றின் ஆய்வாளர் கூறுகின்றார்.

suu-kyi

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அந்தனியோ குத்தரஸ் அவர்கள் மியான்மர் படுகொலைகளை ”இனஅழிப்பு” என குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை பேச்சாளர் தனது குறிப்பில் “கடந்த சில தசாப்தங்களில் இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வு”என்று குறிப்பிட்டிருந்தார்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக  அமெரிக்க அதிபர் டொனால் ட் ரம்ப் ரொகின்யா மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை தடுக்க ”மிகவிரைவான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை கேட்டுக் கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

எந்தவித புலம்பெயர் மக்களின் பலமோ அல்லது புலம்பெயர் கட்டமைப்புகளோ இன்றி ரொகின்யா இனகுழுமம் இன்று முழு  உலகின் கவனத்தையும் பர்மா பக்கம் திருப்பி இருக்கிறது. சர்வதேச தலையீடு என்பது வல்லரசுகளின் நலன்களின் அடிப்படையிலானது என்பது பொதுவான ஒரு விதியாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அரசுகள் தமக்கு பாதகம் விளைந்து விடாத படியான கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நிலை இதர அரசுகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் பாதுகாப்பதாக உள்ளது.

தென்சீனாவுக்கான எரிபொருள் குழாய்களின் இந்து சமுத்திர வாயில், சித்வே துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. சித்வே, ரஹைன் (Rakhine)  மாநிலத்தின் தலைநகரமாகும். பர்மா அண்மைக்காலமாக இந்து சமுத்திர கரையோர ரஹைன் மாநிலத்தை புதிய அபிவிருத்திகளுக்கு உள்ளாக்கியுள்ளது.  ஆனால் மேலைத்தேய நிறுவனங்களின் முதலீட்டிலும் பார்க்க சீன முதலீடுகள் மியான்மரில் குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது.

Ronhigya

மேலைத்தேய சார்பு பரிசான நோபல் பரிசு ஒன் சான் சூகி அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் சூகி அம்மையாரின் சீன சார்பு இராணுவ ஆட்சிக்கு எதிராக எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போராடியமையே ஆகும் . ஆனால் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது.  சீனாவின் வெற்றிக்கு வெற்றி (Win Win Economic Diplomacy)  பொருளாதார இராசதந்திரத்தால் ஒன் சான் சூகி அவர்களும் சீனசார்பு கொள்கையிலிருந்து வெளிவரமுடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சீன தரப்பு தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே கொந்தளிப்பு நிலையைத் தவிர்க்கவே விரும்புகிறது. தெற்கு சீனப் பகுதிக்கான வழங்கல்களை சீராக வைத்திருப்பதை நோக்காக கொண்டது .தென் சீன நகராக கும்மிங் பகுதியின் வளர்ச்சி இந்த வழங்கல் பாதையில் தங்கி உள்ளது. ஆனால் சீனாவின் அதீத பொருளாதார நலன் திட்டங்களை ஏற்றுக்கொண்டு விட்ட பர்மாவுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதில் தாராள சனநாயக மேலை நாடுகள் கவனமாய் இருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தை தேரவாத பௌத்தம் தனது அடிப்படைவாத சிந்தனைகளை நிறைவேற்றுவதற்கு,  சிறீலங்காவில் மேலை நாடுகளுக்கும் சீன பொருளாதார வளர்ச்சியின் திட்டங்களுக்கும் நடுவில்- உள்நாட்டில் சிறிய இனமான தமிழினம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதேபோல மீண்டும், மேலை நாடுகளிடம் நற்பெயர் பெற்றுக்கொண்ட ஓன் சான் சூகி அம்மையாரையும் சீன பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் வைத்து ரொகின்யா இனத்தவர்கள் கதை முடிக்கப்பட்டு உள்ளது.

மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ள இனவாதம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பெயரால் மேலை நாடுகளில் அடிபட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பமே அதிகம் உள்ளது. தாராள பொருளாதாரக் கொள்கை என்ற வகையில்  மேலை நாடுகளுக்கு முதலீட்டு அழைப்பு விடுவதன் மூலம் குற்றங்களின் தன்மை வலுவிழந்து போய்விடும் என்பது பார்வையாக உள்ளது.

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *