மேலும்

உலகறிந்த நல்லாசான் நற்பணி தொடர வாழ்த்துகின்றோம்

tasieஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம்.   ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர். 

மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ்மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் பெருமகனார் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள்.

அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது.

ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ்நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு வேரூன்றி இருந்த – அவர் மொழியில் சொல்வதானால் உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.

அவரது நெறியாள்கையில் உருவான பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை,  புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் சமூகப்பரப்பில் வெகுவாகப் பாராட்டப்பட்டதோடு மக்கள் கலைஞன் என்ற அங்கீகாரத்தையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.

உலகு தழுவிய சமூக பண்பாட்டுப் பரப்பில் அவரது படைப்புக்கள் என்றும் சாகாவரம் பெற்றவையாகவே விளங்கி வருகின்றமை என்றும் எமது இனத்துக்கான பெருமையே.

லண்டனில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றிய இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய ஸ்ரீ சலாமி நாடகம் ஆங்கிலம், ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒருசேர அமைந்த ஒன்று.

அது சுவிஸ் நாட்டில் 36 தடவைகள் அரங்கேறி உள்ளது.

ஐரோப்பா,  கனடா, தமிழ்நாடு ஆகிய நாடுகளில் நாடகப்பயிற்சி அளித்துள்ளார். சுவிற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டுவிழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது.

அத்தகைய பெருமைக்குரிய பெருமகனார் எமது இனத்தில் எமது மொழிக்கும் கலைக்கும் அரசியல்நெறிக்கும் பண்பாட்டு வழிக்கும் பெருமை ஏற்படுத்திய புதிய மறுமலர்ச்சிப் பாணியில் எங்களை வழிகாட்டிய பெருமைக்குரியவர்.

இவர் நாடக உலகோடு மட்டும் தனது பணியை வரையறுத்துக் கொள்ளவில்லை. அரசியல், சமூகம், ஊடகம், எழுத்து என்று அவரது சமூகப்பணிக்குப் பல முகங்கள் உண்டு.

தன்னை நாடி வருபவர் அனைவரையும் அரவணைத்து வேண்டியதை செய்து கொடுக்கும் பெரும் பண்புமிக்கவர்.

அதனால்தான் சுவிஸ்சர்லாந்து நாடும் அந்நாட்டில் வாழும் ஈழத்தமிழ்மக்களும் அவரது பெரும் பணிகளைப் பாராட்டி அவரை கௌரவிக்க முனைந்தமை அறவழியிலான அவரது பணியின் தூய்மைக்கான அங்கீகாரமே.

பெருமகனார் ஏ. சீ.தாசீசியஸ் அவர்கள் எதையும் திட்டமிட்டபடி ஒழுங்கு முறைப்படி செய்து முடிக்கும் செயல்வீரன்.

“சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியலாம்
சொல்லிய வண்ணம்செயல்.”

எனும் குறள்வழிக்கு ஒப்ப இவர் சொல்வதை செயற்படுத்துவதில் வல்லவர்.

இவ்வல்லமையும் அவர்தம் வாய்மை வளமும் மென்மேலும் வளர்ந்து சிறக்கக் கலையுலக பெருமக்களால் விழா எடுத்து போற்றப்படும் இச்சூழலில் மகிழ்ந்து வாழ்த்தி எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

–  புதினப்பலகை குழுமம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *