மேலும்

மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா

Rajeev Rajendranமனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை  ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம்  அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த இவரை அவுஸ்ரேலிய அரசாங்கம், மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பியிருந்தது.

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தனது உடலுக்குத் தானே தீங்கிழைக்க முற்பட்டதையடுத்து, ரஜீவ் ராஜேந்திரன்  அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு உரிய உளவளச் சிகிச்சைகள் அளிக்கப்படாத நிலையில், தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, சிறிலங்காவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்துடன் நேற்று தொடர்பு கொண்டனர்.

ரஜீவின் உடலை கொண்டு வந்து ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று அவரது உறவினரான மதி என்பவர் தெரிவித்துள்ளார்.

“இந்தளவு பணத்தை எப்படிப் பெறுவது என்று எமக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள், எமது அன்புக்குரிய ரஜீவை எம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்- அது போதாதா? இப்போது, பணமும் கேட்கிறார்கள்?“ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, ரஜீவ் ராஜேந்திரனின் உடலை,  எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல்,  கூடிய விரைவில் அவரது குடும்பத்தினரிடம் ஒபபடைப்பதற்காக சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ் அகதிகள் பேரவை அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மேலும், அநீதியான முறையில் தடுத்து வைத்திருந்ததால் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளையும், இழப்பீட்டையும் வழங்குமாறும் அவுஸ்ரேலிய அரசிடம் தமிழ் அகதிகள் பேரவை கேட்டுள்ளது.

அத்துடன், மனுஸ் தீவு மற்றும் நௌரு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *