மேலும்

வடமராட்சிக் கடலேரியில் மழைநீரைத் தேக்கி குடாநாட்டுக்கு குடிநீர் வழக்க புதிய திட்டம்

jaffna-river-projectயாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. 78 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வடமராட்சி கடலேரியில், ஆண்டு மழைவீழ்ச்சியில் 20 சதவீதத்தை தேக்கி வைத்து, அதனை குடிநீர்த் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை, சிறிலங்காவின் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சின் செயலரும், ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பணிப்பாளருமான பொறியாளர் ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் வழிகாட்டுதலில் நடைமுறைப்படுத்த சிறிலங்கா அமைச்சரவை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு பெறப்படும் 1250 மி.மீ மழைவீழ்ச்சி மூலம் கிடைக்கும் நீர்,  ஆவியாவதால்  நீர்ச்சமனிலையில் ஏற்படுத்தும் தாக்கம் நிபுணர்களால் முன்னர் கணக்கிலெடுக்கப்படவில்லை.

கடலேரியில் இருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல், அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் நிபுணர்கள் பலரும், இதற்கான சாத்திய ஆய்வுகளை மேற்கொண்டும், அவை வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில், சிறிலங்காவைச் சேர்ந்த,  சரே பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.கே.குகனேசராஜா, புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். நீர் ஆவியாவதை ஓரளவுக்கு தடுக்கும் வகையில், இந்த எளிய ஆனால், புத்திசாலித்தனமான பொறியியல்  திட்டம் அமைந்துள்ளது.

இதன்படி, கடலேரியில் அமைந்துள்ள 78 சதுர கி.மீ பகுதியில்  பொழியும் மழைவீழ்ச்சியில் 20 சதவீதம், 10 சதுர கி.மீ பரப்பளவான குளம் ஒன்றில் தேக்கி வைக்கப்படும். இதன் மூலம், குறைந்தளவு நீர்மேற்பரப்பில் இருந்து நீர் ஆவியாவது குறைக்கப்படும்.

இதன் மூலம் யாழ். குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவையை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *