மேலும்

20 ஆவது வரைவைக் கைவிட்டது சிறிலங்கா அரசு – நாளை மற்றொரு திருத்தத்தை முன்வைக்கிறது

lakshman kiriella20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறாது என்றும், எனினும், நாளைய அமர்வில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை ஐதேக முன்வைக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே திட்டமிட்டபடி, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நாளை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இதற்கான முடிவு ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் சட்டபூர்வத் தன்மை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்ட வரைவை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது என்று, தனது பெயரை வெளியிட விரும்பாத ஐதேகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும், வகையில், மாகாணசபைத் தேர்தல் திருத்த யோசனையை, சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஜூலை மாதம், வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், குறைந்தபட்சம் 30 வீத பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று, 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் திருத்த செய்வதற்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *