மேலும்

சரத் பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

lakshman kiriellaமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டது, அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

அத்துடன், முன்னைய அரசாங்கத்தைப் போன்று, தற்போதைய அரசாங்கம் இராணுவத் தளபதிகளை ஒருபோதும் சிறையில் அடைக்காது.  சிறிலங்கா ஆயுதப் படையினரை எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றமும் தண்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஜெனரல் ஜயசூரிய குற்றங்களை இழைத்திருந்தார் என்றும், அதுகுறித்து சாட்சியமளிக்க தாம் தயாராக இருப்பதாகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இதுகுறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று,  கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை என்ன? நாட்டின் பாதுகாப்பு படையினரை காட்டிக் கொடுத்த அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று அவர் கேள்விகளை எழுப்பினார்.

அத்துடன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகள், தூதுவர்கள்,  வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திரிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மேலும், வெளிநாடுகளில் பாதுகாப்புப் படையினரை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தினேஸ் குணவர்த்தன கோரினார்.

இதற்குப் பதிலளித்த, அவை முதல்வரான லக்ஸ்மன் கிரியெல்ல, இந்தக் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு கூட்டு எதிரணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *