மேலும்

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

tilak marappanaபோர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட திலக் மாரப்பன, நேற்று வெளிவிவகார அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் வொசிங்டனில், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராக இருந்த பிரசாத் காரியவசம் முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிட்ட போது, சிறிலங்காவின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்குவதற்கு முத்தரப்பு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதகுறித்து திலக் மாரப்பனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

tilak marappana

அதற்கு அவர், “அதற்கு அரசியலமைப்பு இடமளிக்காது.  அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இந்த நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளது. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும், வெளிநாட்டு நீதிபதிகள் உள்நாட்டு பொறிமுறைக்கு உதவ முடியும். விசாரணைகளை அவர்கள் கண்காணிக்க முடியும். அதற்கு எந்த தடைகளும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் சிறிலங்காவின் செயற்பாடுகளையிட்டு அனைத்துலக சமூகம் திருப்தியடைந்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துலக சமூகம் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மேலும் காலஅவகாசத்தை சிறிலங்கா அரசாங்கம் கோரும்.

இதனை ஒரே இரவில் செய்து விட முடியாது. கால அவகாசம் தேவை. இதனை நிறைவேற்றுவோம் என்று அனைத்துலக சமூகத்துக்கு உறுதியளித்திருக்கிறோம். நாங்கள் முட்டாள்தனமாக விளையாடமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *