மேலும்

அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்ச நீக்கப்படுவார்?

Wijeyadasa Rajapaksheநீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மீது ஐதேகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முடிவை விமர்சித்து. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, இவரது அமைச்சின் கீழ் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்தடிக்கின்றமை, ரவி கருணாநாயக்க விடயத்தில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டவாளர் நடந்து கொண்ட முறை, போன்ற விடயங்கள் தொடர்பாக விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா அதிகாரி ஒருவரை இவர் விமர்சித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரவி கருணாநாயக்க பதவியை விட்டு விலகியதும், நாடாளுமன்றத்தில் உள்ள சிறிலங்கா பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும் என்று கோரினர்.

அவர்களுடன் சென்ற பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருண, ஹெக்டர் அப்புகாமி, அசோக பிரியந்த, சாந்த அபேசேகர, சந்திப சமரசிங்க, சமிந்த விஜயசிங்க, கவிந்த ஜெயவர்த்தன, துசித ஜெயமான போன்றவர்களும் விஜேதாச ராஜபக்ச குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அவரை பதவி நீக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், விஜேதாச ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் அடுத்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொள்வார் என்று ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *