மேலும்

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி

australiaஅவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது தர்க்க ரீதியானது. ஆயுதங்கள் தேவைப்படும் நாடுகள் அவற்றைப் பிற நாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதை விட தாமே அவற்றை உற்பத்தி செய்வதானது செலவு குறைந்தது. அத்துடன் தேவைக்கு மேலதிகமான ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பது இலாபத்தை ஈட்டித்தரும். குறிப்பாக இந்த ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கு விற்பது மிகவும் சிறந்தது.

ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும் போது அவற்றுக்குப் பூசப்படும் நிறப்பூச்சுக்கள், மறைக்கப்பட்டிருக்கும் சக்தி, அவற்றின் அடிக்குறிப்புக்கள் போன்றன கவர்ச்சியைக் கொடுத்தாலும் கூட, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் போதே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அதாவது இந்த ஆயுதங்கள் மக்களை இலக்கு வைத்தும் மூலோபாய இலக்குகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, 1914ல் பிரித்தானியாவால் ஜேர்மன் மீது யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யுத்தமானது 1839 லண்டன் சாசனத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமானது சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக வரையப்பட்ட சில சாசனங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பாவை யுத்தத்திற்கு இழுத்துச் சென்றது.

ஆகஸ்ட் 4, 1964ல், ரொன்கின் வளைகுடாவில் வட வியட்னாமிய கண்காணிப்புப் படகுகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இதையொத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக, 2006 ஆகஸ்ட் 04 அன்று பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சிறிலங்காவின் மூதூரில் வைத்து சிறிலங்கா காவற்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையிலான யுத்த காலப்பகுதியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

warcrimeஇவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் அவுஸ்ரேலியா மூலோபாய நலனைக் கொண்டிருந்தது. யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினருக்கும் பெருமளவான ஆயுதங்கள் தேவைப்பட்டன.

உலக யுத்தத்தின் போது பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமானது ஆயுத உற்பத்திகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் தங்கியிருந்தது. வியட்னாம் யுத்தத்தின் போது மேற்கைத்தேய மற்றும் கீழைத்தேய நாடுகள் ஆயுதங்களை வழங்கின.

இதேபோன்று சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்திலும் வெளிநாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவே சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெறக் காரணமாகியது. ஆயுதங்கள் எவ்வாறான மூலோபாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட அவை தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

உலக மகாயுத்தமானது பெரும் உயிரழிவையும், சொத்து அழிவையும் ஏற்படுத்தியதுடன் பட்டினி மற்றும் இடப்பெயர்விற்கும் வழிவகுத்தது. இதனால் மக்கள் மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகியதுடன் சமூகக் கிளர்ச்சிகளும் அதிகாரத்துவ ஆட்சிகள் இடம்பெறுவதற்கும் வழிவகுத்தது. பாரிய ஆயுதங்களின் பயன்பாட்டால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பிரித்தானியாவானது வீழ்ச்சியடைவதற்கும் இதுவே காரணமாகியது.

பிரித்தானியா அனைத்து நலன்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை இந்த யுத்தத்தால் ஏற்பட்டது. ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த யுத்தமானது இலாபத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் மனிதர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ரொன்கின் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது அமெரிக்க அதிபர் தென்கிழக்காசியா மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்தது.

அமெரிக்கா தனது மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த யுத்தத்தை ஆரம்பித்தது. முதலில் தனது பிராந்தியத்திற்குள் நுழைந்த அமெரிக்காவின் கப்பல்களை வியட்னாமிய கண்காணிப்புப் படகுகள் தடுத்து நிறுத்தின. ஆகஸ்ட் 02ல் அமெரிக்கக் கப்பல்கள் வியட்னாமியக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தன. அமெரிக்காவிற்கும் வியாட்னாமிற்கும் ஆரம்பித்த யுத்தத்தின் விளைவால் வியாட்னாம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததுடன் இவர்களின் விவசாயமும் பாதிக்கப்பட்டது, பெருமளவான உயிரிழப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அரசாங்கம் மீதும் மேற்குலகம் மீதும் நம்பிக்கை இழக்கப்பட்டதுடன் ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் போது நடந்தவற்றுக்கும் காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டது. இவ்வாறான யுத்தங்கள் நாடுகளின் மூலோபாய நலன்களை மையப்படுத்தியே இடம்பெற்றன.

சிறிலங்காவில் 17 தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதானது சிறிலங்காவின் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் வேறு நாடுகளிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததன் விளைவாகவே இடம்பெற்றது. ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்கும் நாடுகளின் மூலோபாய நலனாக தமக்கான வருவாயை அதிகரித்தல் காணப்படுகிறது.

ஆயுதங்களின் தரங்கள் மேலும் அதிகரிக்கப்படுவது ஆயுத உற்பத்தியாளர்களுக்கு நன்மையைக் கொடுத்தாலும், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் இந்த ஆயுதங்களின் பயன்பாட்டால் பெருமளவான தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இது தமிழ் மக்களுக்கு பாரியதொரு இழப்பாகக் காணப்படுகிறது. இது தமிழ் மக்களின் பாதுகாப்பைப் பாதித்துள்ளது.

war crimeஇது தமிழ் மக்களின் சட்ட உரிமையைப் பாதுகாக்கத் தவறியுள்ளது. இவர்களின் சுதந்திரமான நடமாட்டம், தமிழ் மக்களின் கலாசாரம் போன்றவற்றைப் பெருமளவில் பாதித்துள்ளது. இந்த யுத்தத்தால் சிறிலங்கா அரசாங்கத்தின் மூலோபாய நலன்கள் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டாலும் கூட இதனால் ஏற்பட்ட செலவு எத்தகையது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பயன்பாடானது இவற்றைப் பயன்படுத்தும் நாடுகளின் மூலோபாய இலக்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளையில் குறித்த நாடுகளில் வாழும் மக்கள் உயிரிழப்புக்களைச் சந்திப்பதற்கும் காரணமாக உள்ளன. ஆகவே அவுஸ்ரேலியர்கள் திரு.பியனின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்.

ஆயுதங்களை உற்பத்தி செய்வதானது ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதைரியத்தைக் கொடுக்கும் என்பது ஒருபுறமிருக்க அவற்றை விற்பதால் வேறுவிதமான ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவுஸ்ரேலியா தனது ஆயுத தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதால் கிடைக்கும் நன்மை என்பதற்கப்பால் இதன் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையால் நாட்டிற்கு ஏற்படும் தீங்கையும் இதன்பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான செலவையும் அவுஸ்ரேலியாவின் பொருளியலாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஆயுத உற்பத்தியானது எவ்வாறு அவுஸ்ரேலியாவின் மூலோபாய இலக்குகளுக்கு உதவியுள்ளன அல்லது அழிவை ஏற்படுத்தியுள்ளன என்பது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசியல் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும். இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும் துன்பங்களையும் மனித நேயத்துடன் அவுஸ்ரேலியர்கள் உற்றுநோக்க வேண்டும்.

ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கிடைக்கும் நிதியில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா என்கின்ற வினாவையும் அவுஸ்ரேலியர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

வழிமூலம்        – Eureka Street
ஆங்கிலத்தில்  – Andrew Hamilton
மொழியாக்கம் – நித்தியபாரதி

*Andrew Hamilton is consulting editor of Eureka Street.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *