மேலும்

சிறிலங்கா இராணுவ பிரதித் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ

Major General Dampath Fernandoசிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, நேற்று முதல் இந்தப் பதவிக்கு மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கெமுனு வோச் படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரியாகவும் உள்ள மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, இதற்கு முன்னர் முல்லைத்தீவு படைகளின் தலைமையக தளபதியாக பணியாற்றினார்.

இவர் 1983ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டு, 1984ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது லெப்டினன்ட் தர அதிகாரியாக இராணுவத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

காலாட்படை அதிகாரியாக இவர் இரண்டு பற்றாலியன்கள், இரண்டு காலாட்படை பிரிகேட்கள், மூன்று காலாட்படை டிவிசன்களின் கட்டளை அதிகாரியாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பணியாற்றியவர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, பிரதான இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நெருக்கடிகளால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *