மேலும்

சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?

hambantota-agreementதுறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் சீன அரசிற்குச் சொந்தமான சீன மேர்ச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 85 சதவீத உரிமையை 99 ஆண்டுகாலத்துக்கு  1.12 பில்லியன் டொலர் குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கு சீன நிறுவனம் இணங்கியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தால் உடன்பட்ட இக்குத்தகைத் தொகையின் 49 சதவீதம் அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக சேவைகள் (HIPS)  என்கின்ற புதிய நிறுவனத்தின் மீது முதலீடு செய்யப்படுவதுடன் இதன் பெரும்பான்மைப் பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தும்.

சீன நிறுவனத்தால் வழங்கப்படும் குத்தகையில் மீதித் தொகையான 146.342 மில்லியன் டொலர் துறைமுகத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படும். இவ்விரு நிறுவனங்களும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் செயற்பாடுகளை இணைந்து மேற்கொள்ளும்.

HIPS நிறுவனமானது இதன் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும். அதாவது இந்த நிறுவனம் அல்லது சிறிலங்கா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இராணுவ நடவடிக்கைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதே இதன் கருத்தாகும்.

சீனாவின் இந்த அறிக்கையானது இந்தியா, சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளினதும் சில சந்தேகங்களைத் தெளிவாக்குகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தனது வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவங்களுக்காகப் பயன்படுத்துவதில் நீண்ட காலமாக ஆர்வம் காண்பிக்கின்றது.

hambantota-agreement

இந்திய மாக்கடலானது கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் அமைந்துள்ளது. அதாவது ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கு இடையில் ஒரு பாலமாகவும் மறுபுறத்தே தென்னாசியாவிற்கான பாலமாகவும் விளங்குகின்றது.

இத்தகைய கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்திய மாக்கடலின் மையத்தில் உள்ள   அம்பாந்தோட்டைத் துறைமுகமானது மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசியாவை இணைக்கும் மிக முக்கிய சக்தி வழங்கும் மையமாக உள்ளது. இது மட்டுமல்லாது ஷி ஜின்பிங்கின் 21வது நூற்றாண்டின் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மிக முக்கிய கேந்திர இணைப்பாகவும் அம்பாந்தோட்டை விளங்குகிறது.

யுரேசியாவின் பூகோள அரசியல் தோற்றப்பாட்டை மாற்றியமைக்கக் கூடியதும் சீனா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக இணைக்கின்ற பாரியதொரு செயற்திட்டமாக சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் காணப்படுகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நிதியை  சீனா வழங்கியதானது இந்திய மாக்கடல் மீதான தனது பூகோள அரசியல் பிரசன்னத்தை விரிவாக்குவதில் சீனா குறியாக  உள்ளது என்பதையே காண்பிக்கின்றது.

ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தளவில் சீனாவின் நோக்கத்தின் உண்மைத்தன்மையானது மாறுபட்டதாகவே உள்ளது. சிறிலங்காவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகமானது பெரும் சுமையாகவே உள்ளது. இலங்கைத் தீவின் அபிவிருத்தியடையாத அம்பாந்தோட்டையில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை அமைப்பதன் மூலம் அங்குள்ள மக்களின் வாழ்வியலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதே இத்திட்டத்தின் நோக்காக இருந்தது.

ஆனால் எதிர்பார்த்தது போன்று இத்துறைமுகமானது தன்னகத்தே கப்பல்களை ஈர்த்துக் கொள்வதற்குத் தவறியுள்ளது. ஜனவரி 2017ல், சிறிலங்கா-சீனத் தொழிற்துறை வலய அபிவிருத்தித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில், இடம்பெற்ற போது இத்தொழிற்துறை வலயத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்கனவே 55 சீன முதலீட்டாளர்கள் உடன்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் 100,000 வரையான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் கணிப்பிடப்பட்டது. ஆனால் உள்நாட்டில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புக் காண்பிக்கப்பட்டதால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளுர் மக்களின் காணிகள் தொழில்வலய அபிவிருத்திக்காக சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இத்தொழில் வலயமானது 15000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்தது. ஆனால் 1235 ஏக்கரிலேயே இத்தொழில் வலயம் அமைக்கப்படும் என விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழில் வலயத்திற்கு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதானது தமது இறையாண்மையைத் தாம் இழப்பதற்கு வழிவகுப்பதாகக் கூறி அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பைக் காண்பிக்கின்றனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதால் எரிபொருள் விநியோகத்திற்கு உதவுமாறு சிறிலங்கா அரசாங்கத்தால் இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் பெற்றோலியத் துறையில் செல்வாக்குச் செலுத்துவதை எதிர்த்தே பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அம்பாந்தோட்டை தொடர்பாக சீனாவுடனான ஒப்பந்தத்தை சிறிலங்கா மீளாய்வு செய்த மறுநாள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அம்பாந்தோட்டைத் துறைமுகமானது கொள்கலன் தாங்கிகளுடன் எரிபொருள் சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.

இதேவேளையில், 2013ல் 286 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட மத்தல ராஜபக்ச அனைத்துலக விமானநிலையத் திட்டமும் தோல்வியடைந்துள்ளது. அம்பாந்தோட்டையில் சீனாவால் முதலீடு செய்யப்பட்ட பல்வழிப்பாதை நெடுஞ்சாலைகள், தொழில் பூங்கா, மாநாட்டு மண்டபம், புதிய துடுப்பாட்ட அரங்கம் போன்றனவும் எதிர்பார்த்தளவு வெற்றியைக் கொடுக்கவில்லை.

இத்திட்டங்கள் சிறிலங்காவிற்கு மேலும் கடன்சுமையை அதிகரித்துள்ளது. அதாவது இத்திட்டங்களால் சிறிலங்கா சீனாவிற்கு 8 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க வேண்டியிருந்தது. அனைத்துலக நாணய நிதியமும் சீனாவின் கடனை அடைப்பதற்கு சிறிலங்காவிற்கு உதவிய போதிலும் இது முழுமையாகச் செலுத்தப்படவில்லை.

இதனால் சிறிலங்காவிற்கு வேறெந்தத் தெரிவும் இல்லாததால் சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 85 சதவீதத்தை 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு வழங்குவதெனத் தீர்மானித்தது.

அம்பாந்தோட்டையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் என்பதால் இந்தியா தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அச்சப்படுகிறது.

சீனா தனது போர்க்கப்பல்களை சிறிலங்கா துறைமுகங்களில் தரித்து நிறுத்திய போது அது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இவ்வாண்டு மே மாதம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பலைத் தரித்து நிறுத்துவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்காவைக் கோரியபோது சிறிலங்கா இந்த வேண்டுகோளை நிராகரித்தது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தானின் குவடார் துறைமுக அபிவிருத்தியை சீனா மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சீன-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலை உருவாக்கும் முக்கிய இணைப்பாக இது உள்ளது. இது ஷி ஜின்பிங்கின் பட்டுப் பாதைத் திட்டத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆபிரிக்காவின் டிஜிபோட்டியில் சீனா தனது முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளத்தை நிறுவியுள்ளது. இவ்வாறாக அபிவிருத்தியடைந்து வரும் சிறிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் சீனா தனது திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

சீனாவின் இத்தகைய செயற்பாடுகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாடுகளை இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து மேலும் அதிகரித்துள்ளது. இது இவ்விரு நாடுகளின் எல்லைப்பிரச்சினையைக் குறிப்பாக சிக்கிமிலுள்ள டொக்லமில் மேலும் மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் இந்திய மாக்கடலில் இந்தியா தனது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக தற்போது அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபடுகிறது. ஆனாலும் இவையனைத்தும் ஆரம்பகட்ட  நகர்வுகளாகவே உள்ளன.

இந்தியா தனக்கான கேந்திர அமைவிட முக்கியத்துவத்தைக் கொண்ட நாடுகளுடன் இன்னமும் உறவைப் பலப்படுத்திக் கொள்ளவில்லை.  இந்தியா இவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்கும் போது மட்டுமே சீனாவின் ‘கடன் சுமை இராஜதந்திரத்தை’ வெற்றிகரமாகக் கையாள முடியும்.

அம்பாந்தோட்டை உடன்படிக்கையானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் கூட, சிறிலங்காவைப் பொறுத்தளவில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சீனாவின் தயவைப் பெறவேண்டிய நிலையிலுள்ளது.

சீனா தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பதை இந்தியா நினைவில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமானதாகும்.

வழிமூலம்       –  The diplomat
ஆங்கிலத்தில் – Narayani Basu
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *