மேலும்

மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?

JMSDF Izumo (2)யப்பானியப் போர்க் கப்பல்களான ஜே..எஸ் இசுமோ (JS Izumo)  மற்றும் ஜே.எஸ் சசனமி (JS Sazanami)  ஆகியன இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து மலபார் 2017 கடல் சார் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது யப்பானின் கடல் சார் ஆதிக்கம் தொடர்பான புதிய நிலைப்பாடு என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஜே.எஸ் இசுமோ வெளிநாட்டுக் கடற்படைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டமை இதுவே முதற்தடவையாகும். 2007 தொடக்கம் மலபார் கூட்டுக் கடற்பயிற்சியில் யப்பான் ஈடுபட்டாலும் கூட 2015 இலேயே யப்பான் இக்கூட்டுப் பயிற்சியின் நிரந்தர உறுப்பு நாடாகியது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான மலபார் இரு தரப்பு கூட்டுக் கடற்பயிற்சியானது 1992 தொடக்கம் இடம்பெற்று வருகிறது.

இந்திய-அமெரிக்க-யப்பான் மலபார் கூட்டுக் கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்னர் 24,000 தொன் எடையுடைய ஜே.எஸ் இசுமோ, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் பின்னர் ஜே.எஸ் இசுமோ மற்றும் ஜே.எஸ் சசானமி போன்றன சிறிலங்காவிற்குப் பயணம் செய்தன. இந்நிலையில் மலபார் 2017 கூட்டுக் கடற்பயிற்சியானது யப்பானிற்கு எத்தகைய பயனைக் கொடுத்துள்ளது?

முதலாவதாக, யப்பானிற்குச் சொந்தமான கடற்பரப்பில் குறிப்பாக சென்காகு தீவுகளைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் வலுவாகி வருவதால் அதனை யப்பான் எதிர்க்க வேண்டிய நிலையிலுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நடைபெற்ற மலபார் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் யப்பான் பங்கேற்றிருந்தது.

malabar-ex (1)மியாக்கோ நீரிணையின் ஊடாக சீன விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் அண்மையில் பறப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சீனாவிற்கும் யப்பானிற்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்துள்ளது. அண்மையில் தென்கொரிய ஏவுகணைகள் யப்பானிற்குச் சொந்தமான கடற்பகுதியைக் கடந்து சென்றுள்ளன. இக்காரணத்தினாலேயே யப்பான் மலபார் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றியது.

இரண்டாவதாக, யப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கூட்டுக் கடல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே யப்பான் மலபார் கூட்டுக் கடற்பயிற்சியில் ஈடுபட்டது. ஆகஸ்ட் 2007ல், யப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே தனது முதலாவது ஆட்சிக் காலப்பகுதியில் ‘பசுபிக் மற்றும் இந்திய மாக்கடல்களில் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் செழுமையை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும்’ என இந்திய நாடாளுமன்றின் முன்னால் ‘இரண்டு மாக்கடல்களின் சங்கமம்’ என்கின்ற தலைப்பின் கீழ் ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

அதிலிருந்து இப்பிராந்தியத்தின் நிலைப்பாடு கணிசமானளவு மாறியுள்ளதுடன் இந்தோ-பசுபிக் என்கின்ற பதமும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக, யப்பானிய தற்காப்புப் படைகள் ஏற்கனவே டிஜிபோட்டியில் தளம் ஒன்றை அமைத்துள்ளன. ஆகவே இந்தத் தளத்திற்கு இந்தியாவின் அமைவிடமானது பிரதான பாதுகாப்பை வழங்குகிறது. இதற்கப்பால், யப்பான் மற்றும் இந்தியா ஆகியன யப்பானால் தயாரிக்கப்பட்ட யு.எஸ்-2 கடல் சார் உளவு விமானத்தை இந்தியா பெற்றுக்கொள்வதற்கு அனுசரணையாக இருந்தன. இதன்மூலம் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் புதிய ஒத்துழைப்பு ஏற்பட்டது.

நான்காவதாக, அமெரிக்காவுடனான இந்தியாவின் அதிகரித்து வரும் உறவானது இந்திய-யப்பான் உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக யப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன நெருங்கிய கூட்டாளிகள் என்கின்ற உண்மையை எடுத்துரைக்க இது வழிவகுத்துள்ளது.

இதேவேளையில், அமெரிக்காவால் தயாரிக்கப்படும் ஆயுதங்களையே இந்தியா தற்போது அதிகமாக கொள்வனவு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றது. இதனால் இந்த மூன்று நாடுகளின் இராணுவப் படைகளிற்கிடையில் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தற்போது, அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பி81 கடற்கண்காணிப்பு விமானத்தை இந்தியா  பயன்படுத்தி வருகிறது.

ஐந்தாவதாக, இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதானது யப்பானின் பொருளாதாரத்திற்கு நலன் பயக்கும். ‘சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான இந்திய-பசுபிக் மூலோபாயம்’ என்பதே பிரதமர் அபேயின் கோட்பாடாகும். இதன்மூலம் யப்பான் இந்திய மாக்கடல் பிராந்தியத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு உதவுகிறது.

malabar-ex (3)சீனா அண்மையில் 10,000 வீரர்களைக் கொண்ட தனது முதலாவது இராணுவத் தளத்தை டிஜிபோட்டியில் நிறுவியது. அத்துடன் சீனா தனது முத்துமாலை மூலோபாயத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ் போன்ற இடங்களில் பல துறைமுகங்களை நிர்மாணித்துள்ளது. இது இந்தியாவிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2016 நவம்பரில் இடம்பெற்ற வருடாந்த இரு தரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மோடி மற்றும் யப்பானியப் பிரதமர் அபே ஆகியோர் சுதந்திரமான கடற்போக்குவரத்து, விமானப் பறப்புக்கள், சட்ட ரீதியான வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கடல் சட்டம் தொடர்பான ஐ.நா சாசனத்தை சீனா கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தென் சீனக் கடல் விவாகாரம் தொடர்பாகவும் மீண்டும் வலியுறுத்தியிருந்தனர்.

யப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு விடயங்களில் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன. அணுசக்தியை வன்முறையற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துதல் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவும் யப்பானும் அண்மையில் கைச்சாத்திட்டன. இது யப்பானைப் பொறுத்தளவில் மிகப் பாரியதொரு வெற்றியாகும்.

இதேபோன்று தற்போது நடைபெற்று முடிந்த மலபார் 2017 கூட்டுக் கடல் நடவடிக்கையானது இந்தியா, அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் சுதந்திரமான கடல் சார் ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

வழிமூலம்        –  Geopolitical monitor
ஆங்கிலத்தில்  – Dr. Rupakjyoti Borah
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *