மேலும்

வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் உதவியையும் கோருவோம்- காவல்துறை மா அதிபர்

Pujitha Jayasundaraயாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய இரண்டு காவல்துறையினரையும் யாழ். போதனா மருத்துவமனையில் பார்வையிட்ட அவர், சிறிலங்கா காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனைகளையும் நடத்தினார்.

இந்த சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றிருந்தாலும், காவல்துறையினர் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று தெளிவாகத் தெரிகிறது என்று இந்தச் சந்திப்பின் போது சில காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிலைமையை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்த உத்தரவுகளையும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பூஜித ஜெயசுந்தர, ”கொக்குவிலில் நேற்று முன்தினம் சிறிலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 11 பேரில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர். இவர் ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட ஏனைய 6 பேரும் கூட, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, போர் முடிவுக்கு வந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் தான்.

இந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படைகளின் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதுகாப்பை அதிகரித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் ரோந்து, சோதனை மற்றும் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

தேவைப்பட்டால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்தப் பிரதேசத்தை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும், இராணுவம், கடற்படை, விமானப்படையின் உதவியையும் பெற்றுக் கொள்வோம்.

தவறு செய்தவர்கள் கைது செய்யப்படும் வரைக்கும், இந்த சிறப்பு தேடுதல், சோதனை , ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *