மேலும்

அவைத் தலைவர் விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடிக்கும் ஆபத்து

cm-colombo-press-1வடக்கு மாகாண அரசியலில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், வடக்கு மாகாண அவைத் தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் கருத்து, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பாக முதலமைச்சரால் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையினால், ஆளும்கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுனரிடம் சமர்ப்பித்திருந்தனர்.

இதையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக ஒரு அணியும், எதிராக ஒரு அணியுமாக ஆளும்கட்சி பிளவுபட்டு நின்றது. இந்த இரண்டு தரப்புகளையும் சமரசம் செய்து வைக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தப் போவதில்லை என்று இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பினார்.

அதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும் என்று ஆளுனருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, இரா.சம்பந்தன், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, இந்த நெருக்கடிக்கு சுமுகமான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மாகாணசபை உறுப்பினர்கள் தாம், நம்பிக்கையில்லா பிரேரணையை விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த வட மாகாண முதலமைச்சர்,

“அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கையை நான் கைவிடுவதாக தெரிவித்ததை அடுத்து இந்த நிலைமை சுமுகமாக வந்துள்ளதாக நம்புகின்றோம். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும். அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் திணைக்களங்கள் அமைச்சுக்களில் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை அளிப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

அவர்கள் சாட்சியங்கள் அளிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்க வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

புதிய அமைச்சரவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், ”பதவி விலகக் கோரிய  அமைச்சர்களின் இடத்திற்கு வேறு அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. தற்போது உள்ள நிலைமையினை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும்.” என்று கூறினார்.

அத்துடன், ”அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க புதிய குழு அமைக்கப்படும். ஏற்கனவே அமைச்சர்களை விசாரணை செய்த குழு சட்டபூர்வமான குழு தான். அதேநேரம் இப்பொழுது மற்றைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணைகளை செய்ய வேண்டியது வேறு ஒரு குழு. ஏனெனில் , இந்த அமைச்சர்களின் விசாரணைகளில் வேறு விதமான பின்னணி இருப்பவர்கள் பங்குபற்ற வேண்டிய காரணம் இருப்பதனால் , அதனை மாற்றி அமைக்க இருக்கின்றோம்.” என்றும் கூறினார்.

அதேவேளை, அவைத்தலைவர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. அவையில் ஒரு அமைச்சருக்கு எதிராகவோ முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் , அதனை அவைத்தலைவரிடம் தான் கையளிக்க வேண்டும்.

இங்கே அவைத்தலைவர் தானாக முன் வந்து தன் பக்கம் சிலரை இழுத்துக் கொண்டு , ஆளுனரிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்து உள்ளார். அவரது அந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றே நம்புகின்றேன்.

அவ்வாறு பக்கச் சார்பாக நடந்து கொண்ட அவைத்தலைவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. அதனை உறுப்பினர்கள் பேச இருக்கின்றார்கள். விவாதிக்க இருக்கின்றார்கள்.  அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.

அவைத் தலைவர் விவகாரத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து, இணக்க முயற்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் விவகாரத்தில் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிந்த தரப்பினர், அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானத்தையே முதலமைச்சர் பதவிக்காக முன்மொழிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *