மேலும்

பருத்தித்துறையில் அமையவுள்ள சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம்

mahinda-amaraweeraசிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர், இதனைக் கூறினார்.

“வடக்கில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பேசாலையிலும், பருத்தித்துறையிலும் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்துக்கான நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் மொத்த உள்நாட்டு மீன் உற்பத்தியில் 40 சத வீதம் வடக்கில் இருந்தே பெறப்பட்டது. போர் நிலவிய 1983இற்கும் 2009இற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பங்களிப்பு 4 வீதமாக குறைவடைந்தது. தற்போது, இது 12 வீதமாக உள்ளது.இது திருப்தியான நிலை அல்ல.

வடக்கில் உள்ள மீனவர்கள் இன்னமும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையே பயன்படுத்துகின்றனர். அவர்களின் படகுகள் மிகப் பழைமையானவை. தென்பகுதியுடன் ஒப்பிடும் போது வடக்கில் மீன்பிடி 20-30 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்ப முறைமைக்கு மாற்றி வருகிறோம்.

அண்மையில் மொறட்டுவ பல்கலைக்கழகம் பருத்தித்துறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்திய ஆய்வை மேற்கொண்டது.

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும்,  நான் அங்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன். இந்த திட்டம் தொடர்பான அவர்களின் கரிசனைகள் தீர்த்து வைக்கப்படும்.

எமது அதிகாரிகள் கடற்றொழில் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இப்போது பலர் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர். இந்த திட்டத்துக்காக தனியார் நிலங்களை நாம் சுவீகரித்தால், அதற்கான இழப்பீடு வழங்கப்படும்.

மீன்பிடித் துறைமுகம் கட்டப்படுவதால் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் பெருமளவு வேலைவாய்ப்பு கிடைக்கும். தெற்கில் இருந்து யாரையும் அங்கு வேலைக்கு அமர்த்தும் திட்டம் எம்மிடம் இல்லை. இந்த முயற்சியால் வடக்கில் உள்ள மக்களே பயனடைவார்கள்.

கடல்வள கைத்தொழில் பூங்கா ஒன்று மன்னாரில் உருவாக்கப்படவுள்ளது. 3000 ஏக்கரில் உருவாக்கப்படும் இந்தப் பூங்காவினால், 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *