மேலும்

கொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்?

US embasy-colomboகொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரித்தானிய தூதரகத்துக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் காணியை அமெரிக்கா கொள்வனவு செய்திருப்பது, சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இடத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைக்கவுள்ளதே இதற்குக் காரணமாகும்.

உயர் தொழில்நுட்ப ரேடர் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற கருவிகள் பொருத்தப்பட்டு இந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.

இது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

US embasy-colombo

கொழும்பு துறைமுகம், கொழும்பு கோட்டே, காலிமுகத்திடல் போன்ற கொழும்பின் முக்கிய வணிகப் பகுதியின் மையத்தில், இந்தக் கண்காணிப்பு அமையம் அமையவுள்ளது குறித்து சீனாவும் இந்தியாவும் மிகவும் கவலையடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் ரேடர் வலையமைப்பை உருவாக்கினால், தாமும் அதுபோன்ற மையங்களை அமைக்க இந்தியாவும், சீனாவும் திட்டமிட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்க தூதுரகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு, அங்கிருந்த கட்டடங்கள் அழிக்கப்பட்டு, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டுமானங்கள், சிறிலங்காவில் உள்ள ஏனைய தூதரகங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த கண்காணிப்பு மைய கட்டுமானத்தினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமைச்சர்களிடம் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதேவேளை, அமெரிக்கத் தூதரகம் கொள்வனவு செய்துள்ள காணியில், கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது பற்றி சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடம் கருத்து கேட்ட போது, அங்கு அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்று தான் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *