மேலும்

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரத்தைப் பாதுகாப்பது சீனாவின் கடமை – சீன அரசின் உயர் பிரதிநிதி

Yu Zhengzheng - maithriசிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் நேற்று தமது குழுவினருடன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுடன் உண்மையான உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு சீனா தயாராக இருக்கிறது.

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சீனாவின் எல்லா முதலீட்டு உடன்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களும், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும், சிறிலங்காவின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

எந்தவொரு கட்டத்திலும், சீனாவும் சீன மக்களும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நட்புறவை பலப்படுத்திக் கொள்வதற்கும், அர்ப்பணிப்புடன் உள்ளனர்.” என்றும் தெரிவித்தார்.

Yu Zhengzheng - maithri

இந்தச் சந்திப்பின் போது. சிறிலங்காவில் தீவிரவாதத்தை அழிப்பற்கு சீனா வழங்கிய உதவிகளுக்காகவும், சிறிலங்காவின் அபிவிருத்திக்காக சீனா வழங்கி வரும் உதவிகளுக்காகவும் சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சிறிலங்கா வந்துள்ள, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங்கும், சறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும இணைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் புதிய வெளிநோயாளர் பிரிவுக் கட்டடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்த போது சீனாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு 9 மாடிகளைக் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவைக் கட்டித் தர சீனா சம்மதித்திருந்தது.

சீனாவின் உதவியுடன் கட்டப்படும் 9 மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர் பிரிவு, ஆசியாவின் மிகப் பெரியதும், சிறிலங்காவின்  பிரதானமானதுமான தேசிய மருத்துவமனையில் இடநெருக்கடியைக் குறைக்கும்.

100 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படும் இந்தப் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *