மேலும்

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

distroyed homesஉங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் உள்ள சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான முகாம் ஒன்றிற்கு அருகில் வீதியோரமாக ஒரு மாதத்திற்கு மேல் தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் தங்கியவாறு இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தினர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவுறும் வேளையில் தமது நிலங்களை ஆக்கிரமித்ததாகவும் ஆனால் தமது நிலங்களைத் தம்மிடம் கையளிப்பதற்கு இராணுவத்தினர் மறுப்பதாகவும் இந்த மக்கள் கூறினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது நிலங்கள் கையளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய போதிலும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இவர்களது நிலங்கள் இவர்களிடம் கையளிக்கப்படும் என  சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்த போதிலும் இதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளில் நில விவகாரமும் ஒன்றாகும்.

சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நில விவகாரம் என்பது முக்கிய காரணியாக உள்ளதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட போது நாட்டில் அமைதி ஏற்படும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை அதிபராகத் தெரிவு செய்வதில் சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 15 சதவீதத்தைக் கொண்ட தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

இதேபோன்று மக்கள் தொகையில் 10 சதவீதத்தைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்தினரும் சிறிசேனவிற்கு தமது பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருந்தனர்.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என தமிழ் மக்கள் விரும்பினர். போரின் போது புலிகள் அழிக்கப்பட்டதுடன் தமிழ் மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்படுவதற்கும் இவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காக சிறிசேன அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் மிகவும் மகிழ்வடைந்தனர்.

திரு.சிறிசேன ஆட்சிக்கு வரும்போது பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார். விரைவில் நாடாளுமன்றில் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்தை முன்வைப்பதையும் இவ்வாண்டு இறுதிக்குள் நாடு தழுவிய மக்கள் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதையும் சிறிசேன தனது இலக்காகக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றிற்கு அதிக அதிகாரத்தை வழங்கும் விதமாக நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதுடன் மாகாணங்களுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களில் முழுமையான சுயாட்சி இல்லாது தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய நிலைப்பாட்டை உருவாக்க முடியும்.

அத்துடன் கலப்பு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதுடன் போரின் போது காணாமற் போன மற்றும் கடத்தப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதாகவும் சிறிசேன அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

18 மாதங்களாக எவ்வித விசாரணையுமின்றி ஒருவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாமல் ஆக்குவதாகவும், போரின் போது அழிக்கப்பட்ட அல்லது சுவீகரிக்கப்பட்ட உடைமைகளுக்கு நட்டஈட்டை வழங்குவதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டது. போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்களையும் விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களைக் கொண்ட கலப்பு நீதிப் பொறிமுறை ஒன்றை அமைப்பது தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

keppapilavu

தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்திற்கு தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் இதற்கு அனைத்துலக சமூகம் மேலும் மேலும் அழுத்தங்களை இடவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அனைத்துலக சமூகம் தன் மீது வசைபாடுவதை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா விரும்புகிறது.

இரண்டு பிரதான கட்சிகளைக் கொண்டே சிறிசேனவின் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று இடம்பெறுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இவர்களது விருப்பிற்கு மாறாக சிறிசேன செயற்பட்டால் தனது வாக்குப் பலத்தை அவர் இழக்க வேண்டியேற்படும் என அஞ்சுகிறார்.

நாடாளுமன்றில் சிங்கள பிரதிநிதிகள் பெரும்பான்மையாக உள்ளதால் அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் கலப்பு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்குமான ஆதரவை சிறிசேனவால் பெறமுடியவில்லை. போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் அனுதாபம் காண்பித்தால், கலப்பு நீதிப்பொறிமுறை தோல்வியடையும்’ என முன்னணி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜெகன் பெரேரா எச்சரித்துள்ளார்.

‘ராஜபக்சவின் எண்ணங்களுடன் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் தற்போதும் செயற்படுவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்குத் தடையாக உள்ளது’ என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். ‘சிறிலங்காவில் தற்போதும் சித்திரவதைகள் தொடர்கின்றன’ என ஐ.நா மனித உரிமைகள் பேரவையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியுடனேயே வாழ்கின்றனர். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தென்னிலங்கையர்களை விட பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக உள்ளனர். இவர்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமது உறவுகளிலேயே அதிகம் தங்கி வாழ்கின்றனர்.

அவுஸ்ரேலியா, பிரிட்டன், கனடா, மலேசியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் போர் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர்களாவர். இவர்களில் சிலர் தமது சொந்த இடத்தில் முதலீடு செய்வதற்காகத் தற்போது திரும்பி வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்குக் கூட அனைத்துலக விமான சேவை மேற்கொள்ளப்படவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள விமான நிலையமானது விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் பல புதிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சமூக மற்றும் விவசாய அபிவிருத்திக்காக சிறியளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் பிரதான தொழில்களில் ஒன்றாகக் காணப்பட்ட மீன்பிடி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிரதேசங்களில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் தமது வாழ்வைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு சுமைகளைச் சந்திக்கின்றனர். இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு போதைப் பொருட்களும் கடத்தப்படுகின்றன. தமிழ் மக்கள் தொழில் வாய்ப்பற்றவர்களாகவும் இது தொடர்பில் ஊக்குவிப்பு வழங்கப்படாதவர்களாகவும் உள்ளதைக் காணமுடிவதாக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த அனைத்துலக வங்கியாளர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்திற்கு சிறிலங்கா மத்திய அரசாங்கத்தால் உதவிகள் வழங்கப்படுவதில்லை. ‘எம்மை அடிமைப்படுத்தவும் எம்மைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அரசாங்கம் விரும்புகிறது. எமது இளைஞர்களை தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்ப எமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்’ என யாழப்பாண வர்த்தக சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்காவின் எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்ற போதிலும் இன்னமும் முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை.

போரில் தோல்வியுற்ற தமிழ் மக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் கூறிவருகின்றனர். இது சாத்தியமற்ற ஒன்றாகும். 2009ல் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் மேலும் மேலும் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கும் என்றே தமிழ் மக்கள் நம்புகின்றனர். ‘நாங்கள் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையை முன்னெடுக்கத் தவறினால், தென்னிலங்கை வாழ் சிங்கள சமூகம் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னெடுக்காது என தமிழ் இளைஞர்கள் கருதுகின்றனர். ஆகவே இதன்மூலம் அடுத்துவரும் தலைமுறையானது புதிய பயங்கரவாதப் பாதையை நோக்கித் தள்ளப்படுவதை எவராலும் தடுக்க முடியாது’ என திரு.சமரவீர எச்சரித்தார்.

வழிமூலம்       – The Economist
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *