மேலும்

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் – குழப்பமான தகவல்களை வெளியிடும் சிறிலங்கா கடற்படை

Vice Admiral Ravindra Wijegunaratneசோமாலிய கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலின் மாலுமிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை குழப்பமான- முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

டிஜிபோட்டிக்கு அப்பால் நேற்று முன்தினம் ARIS 13 என்ற எண்ணெய்க் கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பல் சோமாலிய கடற்கரையில் நங்கூரமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்தக் கப்பலில் 8 மாலுமிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே இதனை நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களையும் மீட்பதற்கு உதவுமாறு சோமாலிய அதிகாரிகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட கப்பலில் உள்ள மாலுமிகளின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்கள் இன்னமும் தெரியவில்லை. இன்னமும் கடத்தல்காரர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடத்தல்காரர்களுடன் சோமாலிய அரசாங்கம் மூலமே, பேசுவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலில் இலங்கையர்கள் இருக்கிறார்களா- இல்லையா என்பதை அறிய, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக அனைத்துலக உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்பதை முன்னதாக உறுதிப்படுத்திய சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே,கப்பலில் இலங்கை மாலுமிகள் இருக்கின்றனரா – இல்லையா என்பதை இதுவரையில் உறுதி செய்ய முடியவில்லை என்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், “கடத்தப்பட்ட கப்பலில் இருந்து தொலைத்தொடர்பு மீள ஏற்படுத்தப்படும் வரையில், தகவல்களை உறுதிப்படுத்த முடியாது.

கடந்த ஜனவரி மாதம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த கொமரோஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட இந்த எண்ணெய்க்கப்பல், ஜனவரி 28ஆம் நாள் புறப்பட்டுச் சென்றிருந்தது. அப்போது அதில் 8 இலங்கை மாலுமிகள் இருந்தனர் என்று துறைமுக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அதற்குப் பின்னர் இன்னொரு அனைத்துலக துறைமுகத்துக்கு கப்பல் சென்றுள்ளது. வழக்கமாக எண்ணெய்க் கப்பல்கள் வெவ்வேறு துறைமுகங்களுக்கு செல்லும் போது, மாலுமிகள் மாறக் கூடும்.

முன்னதாக Aris 13 கப்பல் சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இந்தக் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது.

கடைசியாக இந்தக் கப்பலில் இருந்து கிடைத்த தகவல், இரண்டு அதிவேகப் படகுகள் தம்மைத் தொடர்கிறது என்பதேயாகும். அதற்குப் பின்னர் எந்த தகவலும் இல்லை.

அவை சோமாலிய கடற்கொள்ளையர்களின் படகுகள் என்று உறுதியாக கூற முடியாது. தற்கொலைப் படகுகளாக இருந்தால் கூட அதனைக் கூற வழியில்லை.

கப்பல் கடத்தப்பட்டிருந்தால் அனைத்துலக இராஜதந்திர வழிகளின் ஊடாகவே தலையீடு செய்ய முடியும்.

மேலதிக தகவல்களுக்காக நாம் காத்திருக்கிறோம், சிறிலங்கா கடற்பரப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே எம்மால் தலையீடு செய் முடியும்.

இப்போது இராஜதந்திர வழியில் மாத்திரமே தலையிட முடியும். சோமாலிய அரசாங்கம் தான் இதில் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் அனைத்துலக உதவியை நாடலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *