மேலும்

தீர்மான வரைவு ஐ.நா பேரவையில் சமர்ப்பிப்பு – கண்காணிப்பு பணியகம் பற்றி ஏதுமில்லை

srilanka-warcrimes-un-reportசிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவில், மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரித்தானியா மற்றும் வடஅயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரதான அனுசரணை நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரையில், பேரவையின் பரிந்துரைகளின் முன்னேற்றம்,  சிறிலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக செயல்முறைகள், ஆகியவற்றைப் பெற்று, பேரவையின் 37ஆவது அமர்வில் எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றையும், 40ஆவது அமர்வில் விரிவான அறிக்கை ஒன்றையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த தீர்மான வரைவு அமைந்துள்ளது.

எனினும், சிறிலங்காவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கண்காணிப்புப் பணியகத்தை அமைப்பது தொடர்பான எந்த விடயமும் , இந்த தீர்மான வரைவில் உள்ளடக்கப்படவில்லை.

கடந்த 7ஆம் நாள் ஜெனிவாவில் நடந்த உப குழு கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவே இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரைவில் எதிர்வரும் மார்ச் 21ஆம் நாள் திருத்தங்களை முன்வைக்க முடியும்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை முன்வைப்பதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 16ஆம் நாளுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *