மேலும்

குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா – விசாரணை நடத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உறுதி

sl-navyகச்சதீவுக் கடலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே, ‘சிறிலங்கா கடற்படையினர் சிறிய படகுகளில் இருந்தே சுட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், வடபகுதி கடலில், அதிவேக தாக்குதல் படகுகளையும், அதிவேக பீரங்கிப் படகுகளையும் தான் சிறிலங்கா கடற்படை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

பாரிய இந்திய இழுவைப்படகுகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிய படகுகளை சிறிலங்கா கடற்படை பயன்படுத்துவதில்லை.

எனினும், கடற்படைத் தளபதியின் அனுமதியின்றி, எந்தவொரு கடற்படைப் படகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சிறிலங்கா கடற்பரப்பில் நுழையும் படகுகளில் உள்ள மீனவர்களைக் கைது செய்வதற்கே உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள்  கடடற்றொழில் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படைதுப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு தவறானது,

எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணைகளுக்கு சிறிலங்கா கடற்படை உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தச் சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படையினர் தொடர்புபடவில்லை என்று ஆரம்ப கட்ட விசாரரைணகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பு எதுவாக இருந்தாலும்,  துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடத்திருக்குமானால், அது ஒரு கவலை தரும் விடயமாகும்.  இந்தச் சம்பவம் தொடர்பாக ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய அதிகாரிகள் நடத்தும் விசாரணைகளுக்கு சாத்தியமான எல்லா ஒத்துழைப்பையும் சிறிலங்கா வழங்கும். என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *