மேலும்

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை – சண்டை வாகனங்களுடன் களமிறங்கவுள்ளது

STFஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முதல்முறையாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக  864.08 மில்லியன் ரூபா செலவிலான பாதுகாப்புத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்த பாதுகாப்புத் தளபாட கொள்வனவுக்கான அமைச்சரவைப் பத்திரம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதிப்படையில், பணியாற்ற அனுப்பப்படவுள்ள 380 சிறப்பு அதிரடிப்படையினருக்கும், இராணுவத்தைப் போல, ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் ஏனைய பாதுகாப்புத் தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கே, அனுமதி பெறப்பட்டுள்ளது.

சிறிலங்காவினால் கொள்வனவு செய்யப்படும், இந்த ஆயுதங்கள் மற்றும் அவற்றுக்கான பராமரிப்பு செலவுகள் பின்னர் ஐ.நாவினால் ஈடு செய்யப்படும்.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை பணிக்கு அமர்த்துவதன் மூலம், கணிசமான அந்நியச் செலாவணியை பெற முடியும் என்றும் அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது வகை காலாட்படைச் சண்டை வாகனங்கள், 360 மில்லியன் ரூபாவுக்கும், விநியோக வாகனங்கள் மற்றும் கருவிகள், 285.40 மில்லியன் ரூபாவுக்கும், வாங்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக ஐ.நா அமைதிப்படைக்கு 200 சிறப்பு அதிரடிப்படையினர் அனுப்பப்படவுள்ளனர். அதையடுத்து, 140 பேர் கொண்ட மற்றொரு அணி அனுப்பப்படும். மேலும் 40 பேர் கொண்ட, உயர் பயிற்சி பெற்ற அணியும் அனுப்பப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *