மேலும்

மகிந்தவின் தலைமையினால் கூட்டு எதிரணிக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது – அமெரிக்கத் தூதுவர்

Atul Keshapசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தமது தலைவராக அங்கீகரிப்பதன் மூலம் கூட்டு எதிரணியினால் எந்த ஆதாயமும் பெற முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் வதிவிடத்தில் கடந்த வாரம், கூட்டு எதிரணியினருடன் நடத்திய சந்திப்பின் போதே, அமெரிக்கத் தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக, சத்ஹண்ட ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவைக் கைவிடவில்லை என்றால், கூட்டு எதிரணி இன்னும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர் எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, தனது மகன் நாமல் ராஜபக்சவை தேசியத் தலைவராக வளர்த்து விடும், நம்பிக்கைக்கு அமெரிக்க அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதாகவும், அதுல் கெசாப் இந்தச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட கருத்துக்களை மகிந்த ராஜபக்சவிடம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,  தெரியபடுத்தியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுமாறு சக்திவாய்ந்த நாடு ஒன்றும், அயல்நாட்டு புலனாய்வு அமைப்பும் அழுத்தம் கொடுத்து வருவதாக, திவயின சிங்கள நாளிதழும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு தரப்புகளும், கூட்டு எதிரணியின்  உயர்மட்ட பிரமுகர் ஒருவரைச் சந்தித்து தனது நிலைப்பாடுகளை தனித்தனியாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், தாமதமன்றி அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பதே, அவரது குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்றும், ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *