வர்தா புயல் கோரத் தாண்டவம் – சென்னையில் பேரழிவுக் காட்சி
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே நேற்று பிற்பகல் கரை கடந்த வர்தா புயலின் போது, 120 கி.மீ இற்கும் அதிக வேகத்துடன் சூறைக்காற்று வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன.
வீடுகளின் கூரைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், அலங்கார தட்டிகள் என்பன தூக்கி வீசப்பட்டன. கடும் மழையும் பெய்தது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் கூட சூறைக்காற்றினால் தூக்கி வீசப்பட்டன.
இதனால் சென்னை நகரம், மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன.
இந்தப் புயலினால் இதுவரையில் 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்கு பார்த்தாலும், முறிந்து விழுந்த மரங்களும், சிதைவுகளுமாக பேரழிவுக் காட்சியாக சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்கள் காட்சியளிக்கின்றன.
வர்தா புயலினால் 1000 கோடி ரூபாவுக்கு மேல் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் இடம்பெற்று வருகின்றன.
நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இன்று காலை இயங்க ஆரம்பித்துள்ளது. தொடருந்து, பேருந்து சேவைகளும் மீளத் தொடங்கியுள்ளன.