மேலும்

ஜெயலலிதா மறைவினால் கச்சதீவு புதிய ஆலயத் திறப்பு விழா நடக்கவில்லை

katchathivuகச்சதீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயத் திறப்பு விழா, பிற்போடப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பங்குத் தந்தை வண.ஜெயரஞ்சன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

கச்சதீவில் சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் அந்தோனியார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

சிறிலங்கா கடற்படை, இராணுவ அதிகாரிகளும், யாழ். ஆயர் தலைமையிலான கத்தோலிக்க குருமாரும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரும் இந்த நிகழ்வில் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திறப்பு விழாவில் பங்கேற்கத் தமக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களும் கோரியிருந்தனர்.

இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, ஆலயத் திறப்பு விழா இப்போது நடக்காது என்றும், ஆலயத்தை யாழ். ஆயரிடம் கையளிக்கும் நிகழ்வே இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 5ஆம் நாள் இரவு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மரணமானதையடுத்து, நேற்று கச்சதீவில் நடக்கவிருந்து புதிய ஆலய கையளிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

புதிய தேவாலயத் திறப்பு விழா எப்போது நடத்தப்படும் என்பது, யாழ். ஆயர் மற்றும் இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நெடுந்தீவு பங்குத் தந்தை வண.ஜெயரஞ்சன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இந்த திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேருக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்திருந்ததாகவும், புதிதாக அறிவிக்கப்படும் திறப்பு விழா நாளில் இவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *