மேலும்

பிடல் காஸ்ட்ரோவும் தமிழரின் உரிமை போராட்டமும்

fidel-castroகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர்.

தனிநாடு கோரிப் போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளால் முன்னுதாரணம் கொண்ட தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர்.

அதனால் தான், பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலகெங்கும், ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் பலத்த உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்தும், பதாதை வைக்கப்பட்டிருந்ததும், காஸ்ட்ரோவின் மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் அறிக்கை வெளியிட்டதும், அந்த உணர்வலைகளின் பிரதிபலிப்புத் தான்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாளில் தான், பிடல் காஸ்ட்ரோவின் மரணச் செய்தி வெளியானது.

அதனைத் தப்பும் தவறுமாக விளங்கிக் கொண்ட பலரும், பிரபாகரனின் பிறந்த நாளில் பிடல் காஸ்ட்ரோ மறைந்ததாக சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு, கதை கட்டியிருந்தனர்.

ஆனால், காஸ்ட்ரோவின் மரணம், பிரபாகரனின் பிறந்த நாளான, நவம்பர் 26 ஆம் திகதி நிகழவில்லை. அதற்கு முதல் நாளான, நவம்பர் 25ஆம் திகதி இரவு 10.29 மணியளவில் தான் பிடல் காஸ்ட்ரோ மரணமானார்.

fidel-castro

இதனை அவரது சகோதரரும், கியூபாவின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அரச தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அறிவித்திருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ ஒரு உலகப் புகழ்பெற்ற புரட்சியாளராக இருந்தாலும், முன்னுதாரணம் மிக்க தலைவராக விளங்கியிருந்தாலும், இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் சார்ந்து அவரோ, அவரது கியூபா தேசமோ கரிசனை கொண்டிருந்ததில்லை என்பது கசப்பான உண்மை.

அமெரிக்காவுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவர், அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏயின் 600 இற்கு மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பியவர், இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும், மக்கள் புரட்சிகளுக்கு வித்திட்டவர், அத்தகைய புரட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் என்று பிடல் காஸ்ட்ரோவுக்கு பல அடைமொழிகள் உள்ளன.

இதனால் தான், கடந்த நூற்றாண்டில், லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் பெயர்களைத் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் சூட்டிக் கொள்வதற்கு பலரும் விரும்பியதைப் போலவே, காஸ்ட்ரோவின் பெயரைச் சூட்டிக் கொள்வதிலும், நிறையப் பேர் ஆர்வம் காட்டியிருந்தனர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, கியூபாவை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிடல் காஸ்ட்ரோ, தனக்குப் பின்னர் தனது சகோதரருக்கு அதிகாரத்தைக் கொடுத்து, வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் என்ற கறை, அவர் மேல் இருக்கத் தான் செய்கிறது.

கியூபாவில் சிறந்த மருத்துவ வசதி, கல்வி வசதி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொடுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக மாற்றிக் காட்டியவர் காஸ்ட்ரோ.

ஆனாலும், மக்களுக்கு முழுமையான ஜனநாயக உரிமைகளை ஒருபோதும் திறந்து விடத் தயாராக இருக்கவில்லை. மனித உரிமைகள் விடயத்தில் அவர் மோசமான அணுகுமுறையையே கடைப்பிடித்தார்.

யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு போல, அமெரிக்காவுக்கு அருகிலேயே இருந்து கொண்டு அதற்கு எப்போதும் குடைச்சலைக் கொடுக்கின்ற ஒருவராகத் தான் பிடல் காஸ்ட்ரோ விளங்கினார்.

கியூபாவிலும், மூன்றாம் உலக நாடுகளிலும், பிடல் காஸ்ட்ரோ ஆரம்பத்தில் மதிப்புமிக்க ஒரு புரட்சியாளனாகவும், உதாரண புருசராகவும் விளங்கிய போதிலும், பிற்காலத்தில் அவரும் கூட அரசுகளின் நண்பனாகவே இருக்கவே விரும்பினார் என்பதை மறந்து விட முடியாது.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு கியூபாவின் ஆதரவு கடைசி வரையில் கிடைக்காமல் போனமைக்கு, இந்தியா ஒரு காரணம், காஸ்ட்ரோவின் கொள்கை இன்னொரு காரணம்.

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமான உறவை கியூபா பேணி வந்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடுகள் நீண்டகாலமாகவே காணப்பட்டு வந்தது. தன்னை மீறி வேறெந்த நாடும் இந்த விவகாரத்தில் தலையீடு செய்வதை இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை மீறிச் செயற்பட பிடல் காஸ்ட்ரோ ஒருபோதும் விரும்பவில்லை.

அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியா விலக்கிக் கொண்ட பின்னரும் கூட கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, இந்த விடயத்தில் தலையீடு செய்யவோ, தமிழ் மக்களுக்கு தார்மீக ஆதரவை அளிக்கவோ தயாராக இருக்கவில்லை.

அணிசேரா நாடுகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ அதன் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். இலங்கையும் அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகித்ததால், இலங்கை அரசாங்கத்தின் நண்பனாக இருக்கவே காஸ்ட்ரோ விரும்பினார்.

இதனால், தமிழ் மக்களின் போராட்டத்தின் மீதான நியாயத்தை- உலகப் புரட்சியாளராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தீவிர அமெரிக்க எதிர்ப்பாளராக விளங்கிய போதிலும், அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன், பிடல் காஸ்ட்ரோ உறவுகளை பேணி வந்தவர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் கூட கியூபாவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டது. இதனால் இறுதிக்கட்டப் போரின் போது, தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதை பிடல் காஸ்ட்ரோவோ, அவருடைய புரட்சிகர கியூப அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை.

உரிமைகளுக்காக போராடிய- ஒரு இனம் மிகப்பெரிய அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போது,  கியூபா அமைதி காத்து அந்த அழிவுகளுக்குத் துணை போயிருந்தது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்கா தொடங்கி வைத்த உலகளாவிய போரை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இலங்கையில் பின்பற்றிய போது, கியூபாவும் அதற்கு ஆதரவளித்தமை வேடிக்கை.

போரின் இறுதிக்கட்டத்தில் கொள்கை ரீதியாக முரண்பட்ட சக்திகள் ஒன்றிணைந்து நின்று இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தன. மகிந்த ராஜபக்ச அரசின் போர் வெற்றி பெற்றமைக்கு அது பிரதான காரணமாக இருந்தது.

எதிர் எதிர் அணியில் இருந்த அமெரிக்காவும் கியூபாவும் ஒன்றாக நின்றன. அதுபோல இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக நின்றன. இதனால் தான், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போர், ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்திய ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட, After the Fall : Sri Lanka in Victory and என்ற நூலில், இந்த விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையில் புலிகளை வெற்றி கொண்ட முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் போரை வெற்றி கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஏனென்றால், சர்வதேச சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டது.  இவ்வாறானதொரு சூழல்  இனிமேல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது” என்று இந்திய ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு தனது நூலில் எழுதியிருக்கிறார்.

இலங்கைப் போர் விடயத்தில் கியூபாவும் கூட தனது பிரதான எதிரியான அமெரிக்காவுடன் முரண்படவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, இலங்கை அரசின் நண்பனாக இருப்பதற்கே கியூபா விரும்பியது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தோற்கடிப்பதற்கு, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கியூபாவும் இணைந்து செயற்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராக பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் குரல் கொடுத்த போதிலும், கியூபாவும் வெனிசுவேலாவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் தீவிர கவனம் செலுத்தியிருந்தன.

மக்கள் புரட்சியின் ஊடாக கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது செல்வாக்கின் கீழ் செயற்பட்ட கியூப அரசாங்கமும், பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கூட வெளிப்படுத்தத் தயாராக இருக்கவில்லை.

தமக்குச் சமதையான அரசுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதில் காஸ்ட்ரோ அக்கறை காட்டியதால் தான், ஒடுக்கப்பட்ட மக்களின் – உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் அவரது கண்களுக்குத் தெரியாமலேயே போனது.

காஸ்ட்ரோவின் மரணத்தை பேரிழப்பாக தமிழர்கள் நினைவு கூர்ந்தாலும், அவரது புரட்சி தனது நாட்டையும் அதன் நலன்களையும் மாத்திரமே இலக்காகக் கொண்டிருந்தது. தமிழர் விவகாரத்தில் கியூபாவினதும், காஸ்ட்ரோவினதும் அணுகுமுறைகள் இந்த உண்மையைத் தான் உணர வைத்திருக்கிறது.

– என்.கண்ணன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *