மேலும்

சிறிலங்கா மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை கற்க முடியாத நிலை

India-emblemஇந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சிறிலங்கா மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில், தலையீடு செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு சிறிலங்கா, ஈரான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெறுவதற்கு, தேசிய அளவில் நடத்தப்படும் நீற் எனப்படும் நுழைவுத் தேர்வில் சித்தியடைய வேண்டும் என்று கடந்த மே மாதம், இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நுழைவுத் தேர்வில், இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள், இந்தியாவில் வதியாத இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே தோற்ற முடியும்.

இதனால், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் முகாமைத்துவங்களின் ஒதுக்கீட்டுப் பட்டியலின் மூலம், அனுமதிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான அனுமதிகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவினால் 250 ஈரானிய மாணவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று புதுடெல்லியில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலும், 2500 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில் இந்திய அரசாங்கம் தலையிடாது போனால், அடுத்த கல்வியாண்டில், வெளிநாட்டு மாணவர்கள் மருத்துவக் கல்வியை கற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகமும், இதேபோன்றதொரு வேண்டுகோளை இந்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

“நான்கு மாணவர்கள் இதுதொடர்பாக எம்மை அணுகினர். இந்த விவகாரம் தொடர்பாக கவனத்தில் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இன்னமும் பதில் இல்லை” என்று சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பான கரிசனையை, இந்திய வெளிவிவகார அமைச்சு இந்திய மருத்துவ சபை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு கொண்டு வந்திருப்பதாக, இந்திய சுகாதார அமைச்சு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இதற்குத் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. விளக்கம் கேட்டு, இந்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *