சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்த இந்தியா முயற்சி
சிறிலங்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதற்கு, இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த மாத நடுப்பகுதியில் இந்தியக் குழு சிறிலங்கா சென்று பேச்சுக்களை நடத்தும் என்று புதுடெல்லியில் இந்திய அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்பாடு, 2000ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையில் உள்ளது.
இந்த உடன்பாட்டில், தனியே பொருட்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் சேவைகள் மற்றும் முதலீடுகளையும் உள்ளடக்குவது தொடர்பாக பேச்சு நடத்தவே இந்திய அதிகாரிகள் குழு சிறிலங்கா செல்லவுள்ளது.
இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு, பொருட்களுக்கு அப்பால், சேவைகள், முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஒக்ரோபர் மாதம் கூறியிருந்தார்.
2015-16ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறிலங்காவுக்கு இந்தியா 5.30 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது. எனினும், 0.75 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களையே சிறிலங்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
தெற்காசியாவில் இந்தியாவின் பிரதான வர்த்தக பங்காளியாக சிறிலங்கா விளங்குகிறது.