திருவனந்தபுரத்திற்கு திரும்பியது நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு
சிறிலங்காவில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.
நைட்ஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு விமானக் கட்டளையகத்தின் 109 உலங்குவானூர்திப் பிரிவு, அண்மையில் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது.
எம்ஐ-17 வி5 ( Mi-17 V5) உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி, வெள்ளம் பாதித்த மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பொதுமக்களை மீட்கும் பணிகளுக்கு மேலதிகமாக, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்தப் பிரிவு கொண்டு சென்றது.
இந்த உலங்குவானூர்திகள் பத்து நாட்களில் கிட்டத்தட்ட 100 பணிகளை மேற்கொண்டதாக திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

