மேலும்

சிறிலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

Yasmin Sookaசித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவராகன யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவின் (UNCAT) கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ள நிலையிலேயே யஸ்மின் சூகா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

‘சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரின் மரபணுவில் சித்திரவதை மற்றும் கடத்தல் போன்றன ஊறியுள்ளதுடன் இவை திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவில் அதிபர் சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கூட இவ்வாறான குற்றங்களைத் தடுத்த நிறுத்த முடியாதுள்ளது.

இவ்வாறான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்காவில் அரசியல் உறுதிப்பாடு ஒன்று தேவைப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் இதற்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

இதற்காக சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையை மறுசீரமைப்பதற்கான முழுமையான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்  எனவும் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

2009ல் முடிவுற்ற புலிகள் அமைப்புடனான இறுதிக்கட்டப் போரில் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவில் யஸ்மின் சூகாவும் இடம்பெற்றிருந்தார்.

இவர் தற்போது தலைமை வகிக்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டமானது, தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட கடத்தல்கள், சட்டரீதியற்ற தடுப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மூன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் 36 தமிழ் மக்களிடமிருந்து சாட்சியங்களைச் சேகரித்துள்ளது.

‘இவ்வாறு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட 36 தமிழர்களில் பத்துப் பேருக்கு அகதித் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பத்துப் பேரது சாட்சியங்களும் நம்பகமானது என்பதை ஏற்கனவே வெளிநாட்டு அரசாங்கங்கள் உறுதிப்படுத்தி அவர்களது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டமானது போரின் போதும் போருக்குப் பின்னரும் சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள 200 இற்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களைச் சேகரித்துள்ளது.

இவ்வாறான குற்றங்களை இழைத்த சில குற்றவாளிகளையும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டம் அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவில் தற்போதும் சித்திரவதை இடம்பெறுகின்றது என்பதையும் நான் எவ்வாறான சித்திரவதைகளை அனுபவித்தேன் என்பதையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்த நான் விரும்புகிறேன்’ என சிறிலங்காவின் வடக்கில் இவ்வாண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடைக்கால நீதி எட்டப்படுவது தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாட்டை ஐ.நா உட்பட அனைத்துலக சமூகம் கொண்டுள்ளது.

சிறிலங்காவில் தொடரும் இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்களின் அவலங்கள் அரசியல் நலன்களுக்காக மூடிமறைக்கப்படக் கூடாது’ என சூகா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *