மேலும்

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – சம்பந்தன் முன் விக்னேஸ்வரன் உறுதிமொழி

cmதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை நடந்த காலைக்கதிர் நாளிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இணைப் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

“சம்பந்தன் அவர்கள் இங்கிருப்பதால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன்.

என்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இப்பொழுதும் இருக்கின்றேன்.

cm

எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை. பல்லாயிரம் மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

என் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அது கொள்கை ரீதியானது.

ஒரு அமைப்பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து.

முரண்பாடுகள் இருப்பதால்த்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து.

சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அம் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும்.

எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *