மேலும்

விக்னேஸ்வரனை முதல்வராக்கியது சரியான முடிவு தான்- இரா.சம்பந்தன்

kalaikkathir-publishing-3வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு இன்றைக்கும் சரியானதே, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த காலைக்கதிர் நாளிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வடமாகாண முதல்வராக விக்னேஸ்வரனைத் தெரிவு செய்ய எடுத்து முடிவு சரியானது என்றே நான் நினைக்கிறேன்.

வடக்கு- கிழக்கில் முதலமைச்சராக இருப்பவர்கள் தரம்வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதுவே எமது மக்களின் எதிர்பார்ப்பு. அவ்விதமான ஒரு முதலமைச்சர் இருப்பது எமக்கு ஒரு பலமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும், தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

அந்த நிலை தொடர வேண்டியது அவசியம். அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த எவரும் முனையக்கூடாது.

பல கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில், பல குறைகள் இருக்கலாம். ஒவ்வொரு கட்சிகளினதும் கருத்துக்களை மதிக்க வேண்டும். இல்லாவிடின் ஒற்றுமையாக செயற்பட முடியாது.

பயங்கரமான சர்வாதிகார ஆட்சியில் இருந்து இந்த நாடு விடுபடுவதற்கு தமிழ்ப் பேசும் மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனினும், எமக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை.

காணாமற்போனோர் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு,அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவப் பிரசன்னம், குடியேற்றம், புனர்வாழ்வு, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. இந்தக் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். அனைத்து மக்களினதும் இறைமை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தமது இறைமையின் அடிப்படையில்- தாம் வாழ்கின்ற பிராந்தியத்தில் தமது அதிகாரத்தை பயன்படுத்தக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்விதமான நிலை ஏற்பட்டால் தான் மக்களின் இறைமையின் அடிப்படையிலான ஆட்சி நடக்கும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் பாடுபடுகிறோம்.

அனைத்துலக சமூகம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. எமக்கு இது ஒரு முக்கியமான நேரம்.

இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பம் குறித்து மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அதேவேளை எமக்குத் தேவையான சட்டரீதியான உள்ளடக்கங்களைக் கொண்ட தீர்வு ஒன்று அமைந்தால் அத்தகைய சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது.

ஏனென்றால் அதிகாரம் எமது கைக்கு வர வேண்டும். எனவே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *