மேலும்

கொக்குவில் படுகொலை – ஒரு மாணவனின் உடலில் இரு குண்டுக் காயங்கள்

killing-studentsகொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது நீதிவான் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குளப்பிட்டிச் சந்தியருகே உந்துருளியில் சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், மதிலுடன் மோதி மரணமானதாக கூறப்பட்டது.

எனினும், அந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், சிறிலங்கா காவல்துறையினரின் நடமாட்டம் இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது, உந்துருளியைச் செலுத்திச் சென்ற மாணவன் பவுண்ராஜ் சுலக்சனின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உந்துருளியைச் செலுத்திச் சென்றவர் மீது துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததால், உந்துருளி நிலைதடுமாறி மதிலுடன் மோதியதில், மற்றைய மாணவன் மரணமாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் முன்னிலையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர், சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட ஐந்து காவல்துறையினர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த மாணவர்கள் இருவரும் கொக்குவில் பகுதியில் விருந்து ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், அவர்கள் உந்துருளியை நிறுத்தாமல் சென்ற போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த வேளையில் மாணவர்கள் இருவரும் மதுபானம் அருந்தியிருந்தனர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *