மேலும்

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

anithaபோகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் நடந்த 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கோல் ஊன்றிப் பாய்தலில், தெல்லிப்பழை மகாஜனா கல்லுரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து, 2014 ஆம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி, பவித்ரா 3.17 மீற்றர் உயரம் பாய்ந்து படைத்திருந்த சாதனையை முறியடித்தார்.

பளை மத்திய கல்லூரி மாணவி ஜே.சுகிர்தா 3.20 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

அண்மையில் தேசிய மட்ட விளையாட்டப் போட்டிகளின் போது, அனித்தா ஜெகதீஸ்வரன், 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனை படைத்திருந்தார். எனினும் அந்த சாதனையை இந்தப் போட்டியில் அவரால் முறியடிக்க முடியவில்லை.

anitha

அதேவேளை, 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்திலும், ஈட்டி எறிதல் போட்டியிலும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா வெண்கலப்பதக்கங்களை வென்றார்.

puvitharan-jathusan-salaksan

இதனிடையே, நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுரி மாணவன் ஏ.புவிதரன் 3.80 மீற்றர் பாய்ந்து, முன்னைய சாதனையை முறியடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்தப் பிரிவில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்களான ஆர்.ஜதுசன் 3.60 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தையும், யு. சலக்சன் 3.55 மீற்றர் தாண்டி முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *