மேலும்

கொத்தணிக் குண்டு குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு

rajitha-senarathnaபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ், சிறிலங்காவில் இறுதிப் போர் நடந்த பகுதியில் கொத்தணிக் குண்டுகளின் பாகங்கள் மீட்கப்படும் ஒளிப்படங்களை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“அந்தப் படங்கள் உறுதிப்படுத்தப்படாதவை. இதுபோன்ற படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.

இவற்றை நாம் தான் பயன்படுத்தினோம் என்று எவ்வாறு நிரூபிக்க முடியும்? அவற்றில் சிறிலங்கா இராணுவத்தின் இலச்சினை இருக்கிறதா?

போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்கள் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலான வெடிபொருள் அகற்றும் பணிகளும் முடிந்து விட்டன.

எதற்காக இவற்றை முன்னரே அவர்கள் வெளியிடவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, இந்த செய்தியாளர் சந்தப்பில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான,

“அந்தப் படங்கள் சிறிலங்காவில் தான் எடுக்கப்பட்டவை என்று கூறமுடியாது. அவை சிறிலங்காவில் எடுக்கப்பட்டவை என்று எப்படி உறுதி செய்ய முடியும்?

கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது சட்டவிரோதமானது.

இது ஜெனிவாவில் மீண்டும் சிறிலங்காவை ஓரம்கட்டுவதற்கான முயற்சி. இந்தப் படங்களைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *