மேலும்

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரியது சிறிலங்கா காவல்துறை

Pujitha Jayasundaraசிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ள சிறிலங்கா காவல்துறை, அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடகச் சந்திப்பில், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து அதனை சிறிலங்கா அதிபரும், நிதியமைச்சரும் பார்வையிடச் சென்றிருந்த போது அங்கிருந்த சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி ஊடகவியலாளர்களை எச்சரித்திருந்தார்.

ஊடகத்தை எப்படிக் கட்டுப்படுத்துவதென்று தனக்குத் தெரியும் என்றும், பாதாள உலகத்தினரைப் போன்று ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்துவேன் என்றும் ரஞ்சித் பெரேரா தெரிவித்திருந்தார்.

இதனை நீங்கள் முப்படையினரிடம் செய்தால்,  அவர்கள் காலை முறித்து தனியாகப் போட்டிருந்திருப்பார் என்றும் அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்து எச்சரித்துள்ளார்.

இந்தக் கருத்தை சிறிலங்கா காவல்துறையும், சிறப்பு அதிரடிப்படையும் கண்டிப்பதாகவும், இது காவல்துறையினதோ, சிறப்பு அதிரடிப்படையினதோ கருத்து அல்ல, இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சார்பில், அஜித் றோகண தெரிவித்தார்.

இதுதொடர்பாக அனைத்து ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் உளப்பூர்வமான மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *