மேலும்

நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ – வெளிநாட்டுப் பின்னணியுடையோர் பாதிப்பு

norway-protest (3)நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின்  ‘பிறந்த இடம்’  கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது.

ஆபிரிக்கா (20 நாடுகள்), ஆசியா (10 நாடுகள்) மற்றும் ஐரோப்பாவில் கொசோவோ என 31 நாடுகளைப் பிறந்த நாடாகக் கொண்டுள்ளவர்களின் கடவுச்சீட்டுகள் புதுப்பிக்கப்படும் போது ‘பிறந்த இடம்’ என்று குறிக்கப்படும் இடத்தில் ‘தெரியாது – Unknown’ எனப் பதியப்பட்டிருக்கும் என்ற அறிவித்தலுக்கு பல மட்டங்களிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. ’Group 2– நாடுகள் என்ற வரையறைக்குள் பிறந்த இடம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்த முடியாத நாடுகள் என இந்நாடுகளை நோர்வேயின் காவல்துறை திணைக்களம் பட்டியலிட்டுள்ளது.

இனவாதத்திற்கு எதிரான நோர்வேஜிய மையம் (The Norwegian Centre against Racism),  பொதுப் பாரபட்சத்திற்கு எதிரான மையம் (Organisation Against Public Discrimination)  போன்ற அமைப்புகள் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

’பிறந்த இடம்’ தொடர்பாக ஏற்கனவே குடிவரவுப் பதிவுகளின் போது, வெளிநாட்டவர் விவகாரத் திணைக்களத்திற்கு ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, கடவுச்சீட்டுகளில் பதிவில் ’பிறந்த இடம்’ உரிய முறையில் பதியப்பட்டிருந்தவர்களுக்கு கடவுச்சீட்டு புதுப்பித்தலின் பின் திடீரெனப் பிறந்த இடம் ’ Unknown’ என ஆக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

norway-protest (1)norway-protest (2)norway-protest (3)norway-protest (4)norway-protest (5)

இது வெளிநாட்டுப் பின்னணிணைக் கொண்டவர்களின் அடையாளம் பேணுதல் சார்ந்த உரிமையை மறுக்கும் செயற்பாடாகப் பார்க்கப்படுகின்றது. அத்தோடு எதிர்மறையான பல விளைவுகளுக்கும், வெளிநாட்டுப் பயணங்களில் நேரடியானதும் மறைமுகமானதுமான சிக்கல்களுக்கும் இட்டுச் செல்லக்கூடியது.

நேற்று மாலை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. பொதுப் பாரபட்சத்திற்கு எதிரான மையம் (Organisation Against Public Discrimination) ஏனைய பல நோர்வேஜிய புலம்பெயர் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தது.

இந்தப் புதிய நடைமுறையை மீளப் பெறுவதோடு, காவல்துறைத் திணைக்களத்தின் இந்தத் தான்தொன்றித்தனமான, விளைவுகளின் பாரதூரத்தைக் கருத்திலெடுக்காத நடவடிக்கை மீது உரிய விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய மனு நாடாளுமன்றத்திற்குக் கையளிக்கப்பட்டது.

நோர்வேயின் நீதித்துறை, காவல்துறை நிர்வாகங்கள் மீது விமர்சனங்களும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. அழுத்தங்களின் விளைவாக, இப்புதிய நடைமுறையினால் ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளைக் களையும் வகையில் அவசர மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகக் காவல்துறைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *