மேலும்

மீறல்களை ஒப்புக்கொண்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி மீது இராணுவ நீதிமன்ற விசாரணை

sl-navyசிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டது மற்றும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்த கடற்படை உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக சிறிலங்கா கடற்படை இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்தவுள்ளது.

கொமாண்டர் கே.சி.வெலகெதர என்ற கடற்படை அதிகாரிக்கு எதிராகவே, இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.

கடற்படைத் தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றார், கடற்படையை இழிவுபடுத்தினார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

கொமாண்டர் கே.சி.வெலகெதர தற்போது சிறிலங்கா கடற்படையின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அதுபற்றித் தமக்குத் தெரியாது என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர் கடற்படைத் தலைமையகத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அவரைப் பார்வையிட முடியும் என்றும் குறிப்பிட்ட சிறிலங்கா கடற்படைத் தளபதி,  தனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவரால் முறையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொமாண்டர் வெலகெதர, சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், திருகோணமலையில் இருந்த கடற்படை சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த அவர், அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் குழுவினருடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *