மேலும்

சிறிலங்காவில் என்ன செய்கிறார் ஆர்மிரேஜ்?

armitage- sampanthanஅமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International  என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ்.

வியட்னாமுக்கு எதிரான யுத்தத்தின் போது இளமைத் துடிப்புள்ள வீரம்மிக்க ஒரு அமெரிக்க கடற்படை அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார்.

இவரது வளர்ச்சியின் பெறுபேறாக, அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக்காலத்தில் றிச்சார்ட் ஆர்மிரேஜ் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகவும் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது நாட்டின் உதவி இராஜாங்கச் செயலராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த வாரம், இவர் சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார்.  தனது இந்தப் பயணமானது வர்த்தக நோக்கைக் கொண்டதல்ல என இவர் தெரிவித்தார். ஆனால் இவர் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ அல்லது தன் சொந்தத் தேவைக்காகவோ சிறிலங்காவிற்கு வரவில்லை என்பதை சிறிலங்காவில் தங்கியிருந்த நாட்களில் இவரின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போதும் கூடைப்பந்து விளையாடும் 71 வயதான ஆர்மிரேஜ் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இவர் முதன் முதலாக 1983ல் அப்போதைய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் கஸ்பர் வெய்ன்பேகருடன் இணைந்து சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

armitage- sampanthan

‘சண்டே ரைம்ஸ்’ மேற்கொண்ட நேர்காணலின் போது, அமெரிக்கக் கோட்பாடுகள், ஐ.எஸ். தீவிரவாதப் பிரச்சினைகள், சிறிலங்கா, மனித உரிமைகள் மற்றும் சீனா மீதான அமெரிக்கக் கோட்பாடுகள் தொடர்பாகவும் றிச்சார்ட் ஆர்மிரேஜ் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கேள்வி:  ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அமெரிக்காவுடனான சிறிலங்காவின் உறவுநிலை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த உறவு நிலை தற்போது முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் இன்னமும் இது பொருளாதார நலன்களை நோக்கி நகரவில்லை. இதன் பெறுபேறாக, சிறிலங்கா,  இந்திய மாக்கடலில் உலகின் அதிசக்தி வாய்ந்த நாடுகளால் முன்னெடுக்கப்படும் பூகோள அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ள போதிலும், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவைத் தனது மீட்பராகவே நோக்குகிறது. முதுபெரும் இராஜதந்திரி என்ற வகையில், அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுமாறு சிறிலங்காவுக்கு எவ்வாறான ஆலோசனையை வழங்குவீர்கள்?

பதில்: அமெரிக்க-சிறிலங்கா உறவானது மகிந்த ராஜபக்ச ஆட்சியுடன் ஆரம்பமான ஒன்றல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான நவீன தொடர்பாடலானது ஜோர்ஸ் டபிள்யூ புஷ்ஷின் காலத்தில் ஆரம்பமாகியது. 2001 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது மிகவும் அற்புதமானதாக இருந்தது. இந்த அடிப்படையில், 2002ல், நாங்கள் மிகவும் நெருக்கமாகினோம். ஆகவே இந்த உறவானது ராஜபக்சவின் இறுதி ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான ஒன்றல்ல. 2005 தொடக்கம் பத்து ஆண்டுகளாக சிறிலங்கா சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்தது.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுவதாக அமெரிக்காவுக்கு சிறிலங்கா வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆகவே நீங்கள் கூறியது போன்று எமது உறவானது வர்த்தக சார் அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டதல்ல என்பது தவறானது. ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் காலத்தில் சிறிலங்காவுக்காக ‘ரோக்கியோவில் உதவி மாநாடு ஒன்றை நடத்தியிருந்தோம்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கமானது மேலும் அனைத்துலக சமூகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் என நான் நம்புகிறேன். சிறிலங்கா, சீனாவுடன் அதிகளவில் தொடர்பைப் பேணுவதற்கு அமெரிக்கா காரணம் எனில், இது தொடர்பில் சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பாரியதொரு தவறாக இருக்கும்.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தென்னாசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் சிறிலங்காவுடன் தொடர்பைப் பேணுவதில் தயக்கம் காண்பித்தனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் சீனா தொடர்பான உறுதியான எண்ணப்பாட்டைக் கொண்டுள்ளனர். அதாவது சீனாவுடன் தொடர்பைப் பேணுவதன் மூலம் சிறிலங்காவிற்குக் கிடைக்கும் நன்மை என்ன தீமை என்ன என்பது தொடர்பாக சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தெளிவைக் கொண்டுள்ளனர். ‘இது வேறுபட்ட சிறிலங்கா. நாங்கள் முன்னர் நடந்தது போன்று தற்போது நடந்து கொள்ள முடியாது’ என்பதை சீனா தற்போது நன்கு புரிந்துகொண்டுள்ளது.

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் உங்களது நாடான அமெரிக்கா மனித உரிமை விவகாரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக பெரும்பாலான இலங்கையர்கள்  நம்புகின்றனர்.

பதில்: மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்றவற்றை நாங்கள் எப்போதும் அரசியல் மாற்றத்தை அடைவதற்காகவே பயன்படுத்துகிறோம் என எம்மீது அடிக்கடி குற்றச்சாட்டு எழுவதை நாம் அறிவோம். மறுபுறத்தே, நாங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அதன் பின்னர் நாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகிறோம். சிறிலங்காவிலும் மக்கள் எம்மிடம் ‘மனித உரிமை மீறல்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் காணாமற் போதல் போன்றன தொடர்பாக குரல் எழுப்பாமைக்கான காரணம் என்ன?’ என வினவுகிறார்கள்.

நாங்கள் அவ்வாறு செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் கூட, நாங்கள் மனித உரிமைகள் மற்றும் மனித அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஆதரவளிக்கிறோம். நாங்கள் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகிறோம் என்பதற்காக மட்டும் இதனைச் செய்யவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தளவில் சில விடயங்களில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்ற முறைமை நிலவும் நாடுகளில் பல்வேறுபட்ட வழிமுறைகள் கைக்கொள்ளப்படுவதால் நான் ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தன்மை போன்ற பதங்களைப் பயன்படுத்தவில்லை.  மக்களின் உறுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்கள் தமது கருத்துக்களை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ள நாடுகளில் செயற்படும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவ அரசாங்கம் என அழைக்க நான் விரும்புகிறேன். இத்தகையதொரு அரசாங்கமானது பல்வேறு விடயங்களை மேற்கொள்ள முடியும். அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். நாங்கள் எப்போதும் சீரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி:  நாடுகளுக்கிடையில் பாரபட்சமான சட்டங்களை அமெரிக்கா  கடைப்பிடிப்பதாகவும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக சிறிலங்கா தொடர்பில் ஒரு நிலைப்பாடும் அதேவேளையில் தனது கூட்டணி நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் தொடர்பில் பிறிதொரு நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுவதற்கான காரணம் என்ன?

பதில்: யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவுடன் சவுதிஅரேபியாவை ஒப்பீடு செய்கிறீர்கள். இது நியாயமற்றது. சிறிலங்காவில் சிறுவர் போராளிகள் மற்றும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் செயற்பட்டுள்ளனர். சிறிலங்காவை நான் சிறிலங்காவுடன் மட்டுமே ஒப்பீடு செய்வேன். வேறெந்த நாடுகளுடனும் ஒப்பீடு செய்யமாட்டேன். நாங்கள் சிலவேளைகளில் எமது கோட்பாட்டில் உறுதியற்றவர்களாக இருக்கின்றோம் என நீங்கள் கூறியது சரி என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

கேள்வி: பயங்கரவாதம் மீதான அதிபர் புஷ்ஷின் யுத்தமானது மத்திய கிழக்கில் அழிவு ஏற்படக் காரணமாகியது. ஈராக் மீதான இவரது ஆக்கிரமிப்பானது ஈராக்கில் யுத்தங்கள் தொடரவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் தோன்றவும் இன்னமும் பல பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாகியுள்ளன.

பதில்: இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள். ஐ.எஸ் தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு ஈராக் மீதான யுத்தம் முதன்மைக் காரணமல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட சைஸ்-பிக்கொற் உடன்படிக்கையை இல்லாதொழிக்க விரும்புவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷுன் ஈராக் மீதான தாக்குதலே ஐ.எஸ் தீவிரவாதிகளை இந்த நிலைக்குத் தூண்டியமைக்கான காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பேசியன் அரேபியர்களின் பிரச்சினையும் இத்தீவிரவாதம் தோன்றக் காரணமாகும். இதைவிட மத்திய கிழக்கிலுள்ள சில நாடுகள் எதேச்சதிகார ஆட்சியை மேற்கொண்டு வருகின்றன. இவர்கள் தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் மேலும் கொடுங்கோலை நடாத்துகின்றனர். மத்திய கிழக்கில் இளைஞர்களின் புரட்சியும் இடம்பெறுகிறது. 20 மில்லியன் வரையான இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று உள்ளனர். இதுவும் தீவிரவாதம் தோன்றக் காரணமாகும்.

கேள்வி: ஆகவே ஈராக்கிய யுத்தமானது தவறானதா?

பதில்: ஆம். இது தவறானது என்றே நான் கூறுவேன். எனினும், சதாம் உசேன் படுகொலைகளைப் புரியும் பாரிய ஆபத்தான ஆயுதப் போரை கைவிடாது விட்டிருந்தால் இதற்கு எதிராக ஐ.நா எத்தனை தீர்மானங்களை இயற்ற வேண்டியிருந்திருக்கும்? 17 அல்லது 18. ஆகவே ஈராக் மீதான படையெடுப்பை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஐ.நாவில் மேலும் பல தீர்மானங்களை இயற்றுவதன் மூலம் ஈராக்கிய யுத்தத்தைத் தடுக்கவே நானும் அமெரிக்கச் செயலர் கொலின் பவலும் முயற்சித்தோம். ஆனால் இந்த யுத்தம் தவறாகியது.

ஈராக்கின் எண்ணெய் வளத்தை அபகரிப்பதற்காகவே அமெரிக்கா யுத்தத்தை மேற்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்தவுடன் ஈராக்கைக் கட்டியெழுப்புவதற்கான பணியை நாங்கள் ஆரம்பித்தோம். ஈராக்கின் எண்ணெய் வளத்தை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அத்துடன் ஈராக் தானாகவே எண்ணெயை சுத்திகரிப்பதற்கான உதவியையும் அமெரிக்கா வழங்கியது.

கேள்வி: சிறிலங்காவிற்கான தங்களின் பயணமானது வர்த்தக நோக்கமற்றது என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்தப் பயணமானது சமாதானம் மற்றும் மீளிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

பதில்: 1983லிருந்து நான் சிறிலங்காவுடன் தொடர்பைப் பேணி வருகிறேன். 2002ல், இது தடைப்பட்டிருந்தது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை அமைதி வழியில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். 2002ல் சந்திரிகா குமாரதுங்கவால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்புக் கட்டமைப்பை நாங்கள் பார்த்த போது சிறிலங்காவுடனான உறவில் நான் விரிசலை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் பத்து ஆண்டுகள் சிறிலங்கா தானாகவே தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக தன்னை ஆக்கிக் கொண்டது. தற்போது அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை மிகச் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கான இறுதிவாய்ப்பை சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் கொண்டுள்ளனர்.

நாங்கள் பாரியதொரு வேறுபாட்டை ஏற்படுத்துவதாக நினைக்கவில்லை. ஆனால் சிறிலங்காவில் அமெரிக்கர்கள் தமது நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது சிறிலங்காவின் அரசாங்கத்திற்கும் அனைத்து சிறுபான்மைத் தரப்பினர்களுக்கும் முக்கியமான ஒன்று என்றே நாங்கள் கருதுகிறோம். சிறிலங்காவை நன்கு புரிந்துகொண்டுள்ள, சிறிலங்காவிடமிருந்து இலாபத்தை அடைந்து கொள்ள விரும்பாத அமெரிக்கர்கள் சிறிலங்காவின் நன்மைக்காக இங்கு தமது நேரத்தைச் செலவிட விரும்புவார்கள். அதனால் தான் நாங்கள் இங்கே வர்த்தகத்தை மேற்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் இங்கு ஏன் நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது தொடர்பில் நீங்களோ, ரணிலோ, அதிபர் சிறிசேனாவோ, சம்பந்தனோ, சுமந்திரனோ, ரவூப் ஹக்கீமோ அல்லது வேறெவரோ சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் தான் நாங்கள் சிறிலங்காவுடன் வர்த்தக நோக்குடன் உறவை விரிவுபடுத்தவில்லை.

கேள்வி: ஆகவே சிறிலங்காவிற்கான தங்களது பயணமானது பொதுநலம் சார்ந்த ஒன்றா?

பதில்: இல்லை. இது எனது நலன் சார்ந்தது. இது எனது நோக்கத்தை அடைவதற்கான இறுதி வாய்ப்பு எனக் கருதுகிறேன். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை அமைதி வழியில் முடிவிற்குக் கொண்டு வருவதற்கான, பயங்கரவாதத்தை மற்றும் பெண் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சிறுவர் போராளிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நாங்கள் கொண்டிருந்த போதும் அது ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணமாக நான் மிகவும் அதிருப்தியடைந்தேன். இது உலக நாடுகளுக்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.

நாங்கள் எமக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் சிறிலங்காவின் நலன் சார்ந்த விடயத்தில் மட்டுமே கவனத்தைக் குவித்துள்ளோம். இது தவிர எமக்கான சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவுடன் தொடர்பைப் பேணவில்லை. நான் சிறிலங்காவுடன் நீண்டதொரு நட்புறவைப் பேணிவருகிறேன். ஏனெனில் சிறிலங்கர்கள் பழகுவதற்கு மிகவும் நல்லவர்கள். அவர்களின் வாழ்வு சிறப்புறுவதற்கான வாய்ப்பை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

ms-armitage (1)

கேள்வி: சிறிலங்கா தலைவர்களை நீங்கள் சந்தித்தபோது, நாட்டை முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளை அவர்களுக்கு எடுத்துக் கூறினீர்களா?

பதில்: அதிபர் சிறிசேனவின் நிலைப்பாடு தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் சிங்களவர்களிடமிருந்து எதையும் பறிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என தென்னிலங்கையில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் சிறிசேன தெரிவித்துள்ளார். எல்லா மக்களும் இன்னமும் சிறப்பாக வாழவேண்டும். இது அதிபர் சிறிசேனவின் மிகவும் சாதுரியமான கருத்தாகும்.

நாங்கள் பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அவர் எவ்வாறு தனது பணியை மேற்கொள்கின்றார் என்பதைப் பார்த்து மகிழ்வடைந்தோம். காணாமற் போனோர் பிரச்சினை தொடக்கம் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்குவது வரையான அனைத்துப் பணிகளையும் அவர் மேற்கொள்வது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்வதில் எவ்வாறான கடினங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன். பழைய வழிகளைக் கையாள்வதை விரும்பும் பலர் இராணுவத்திலும் அரசாங்கத்திலும் உள்ளனர் என்பதை நான் அறிவேன். ஆனால் புதிய வழிநோக்கிப் பயணிக்க விரும்பும் மக்களும் உள்ளனர். அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். சிறிலங்காவை நாங்கள் நேசிக்கிறோம். இது மேலும் சிறப்புற வளரவேண்டும் என விரும்புகிறோம்.

கேள்வி: நீங்கள் இதே தகவலை அதிபர் ஒபாமா அரசாங்கத்திடமும் தெரியப்படுத்துவீர்களா?

பதில்: நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டை நாங்கள் கேட்டறிந்தோம். நாங்கள் இங்கு கண்டறிந்தவற்றை நிச்சயமாக எமது அரசாங்கத்திடம் தெரியப்படுத்துவோம். கடந்த செப்ரம்பரில் நான் இங்கு வரும்போது இருந்த நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. எல்லாக் கட்சியினரும் சில விடயங்களைக் கலந்துரையாடுவதை நான் கண்டேன். இது என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

வடக்கு கிழக்கில் இன்னமும் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் உணர்கின்றேன். ஆனால் சிறிலங்காவின் புதிய கூட்டணி அரசாங்கமானது திறம்பட சிறப்புறச் செயற்படுவதற்கு துணைநிற்கும் அனைத்து இலங்கையர்களையும் நான் நன்றியுடன் நோக்குகிறேன். இது நீண்ட காலத்தின் பின்னர் தற்போது சிறிலங்காவில் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்கின்ற நம்பிக்கையை எமக்குத் தருகிறது.

கேள்வி: ஜெனீவா விசாரணை தொடர்பாக சிறிலங்கா மீது அமெரிக்க அரசாங்கம் தளர்வை ஏற்படுத்துமா?

பதில்: ஜெனீவா மட்டுமல்ல, அனைத்து நடவடிக்கைகளும் எமக்கு நம்பிக்கையைத் தருகிறது. சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு மற்றும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை  போன்றவற்றில் அமெரிக்காவின் உதவி தொடர்பாக நாங்கள் கேள்வியுற்றுள்ளோம். சிறிலங்காவில் வாழும் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும். அதாவது கலாசார, பொருளாதார, கல்வி மற்றும் மூலோபாயக் கருத்துக்கள் மற்றும் ஆதரவுகள் பரிமாற்றப்பட வேண்டும். ஒபாமா அரசாங்கத்தால் இது தொடர்பாக முழுமையானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என சிலர் கருதலாம். ஆனால் திருமதி கிளின்ரனோ அல்லது திரு.ட்ரம்ப்போ இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். அமெரிக்காவின் புதிய அரசாங்கமானது சிறிலங்கா மீது சிறப்புறச் செயற்படுவதற்கான உந்துதலை நாங்கள் நிச்சயமாக வழங்குவோம்.

கேள்வி: சிறிலங்காவை கேந்திர முக்கியத்துவம் மிக்க மையமாக நீங்கள் பார்க்கிறீர்களா?

பதில்: இவ்வாறு பார்ப்பது தவறானது என நான் கருதுகிறேன். சிறிலங்காவை அமெரிக்கா வெறுமனே கேந்திரமுக்கியத்து மையமாக மட்டுமே நோக்கினால் சிறிலங்காவுடன் அவசியமான உறவைக் கட்டியெழுப்புவதில் நாங்கள் தோல்வியடைவோம். சிறிலங்காவை ‘சிப்பாயாக’ நோக்குவதை இலங்கையர்கள் விரும்பவில்லை. இலங்கையர்கள் தமது நாட்டை ‘வீரப்பெருந்தகையாக’ நோக்க வேண்டும் என விரும்புகிறார்கள். சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவில் சிறிலங்காவின் கேந்திர அமைவிடம் முன்னுரிமைப்படுத்தப்பட்டால், சிறிலங்கா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுநிலையானது தோல்வியடையும்.

வழிமூலம்        – சண்டேரைம்ஸ்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *