மேலும்

சிறிலங்காவை அமைதி யுகத்துக்கு கொண்டு செல்வாரா மைத்திரி? – நியூயோர்க் ரைம்ஸ்

maithriசிறிசேனவின் நேர்மையின் மீது எவரும் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் சிறிசேனவிற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு கைநழுவி விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.

இவ்வாறு நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழில், GEETA ANAND and DHARISHA BASTIANS ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இலங்கைத் தீவு சுதந்திரமடைந்தது தொடக்கம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகத் தொடரும் இனமுரண்பாடு மற்றும் யுத்தம் போன்றவற்றிற்கு முடிவாக அரசியற் தீர்வொன்று முன்வைக்கப்படும் என சிறிலங்காவின் அரசியற் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை வழங்கி வந்துள்ளனர்.

பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் அரசியல் அதிகாரப் பிரிவினை தொடர்ந்த வண்ணமுள்ளது. இது தொடர்பாக நிரந்தர அரசியற் தீர்வை வழங்குவதாக சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அதிபர்களும் வாக்குறுதி வழங்குகின்ற போதிலும், இவை எதுவும் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.

தற்போது சிங்களப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த மிதவாதிகள் மற்றும் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினரின் ஆதரவுடன் கூட்டணி ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சிறிலங்காவின் அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிறிலங்காவின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நீண்ட காலமாக நிலைத்திருந்த இனமுரண்பாட்டின் காரணமாக தமிழ் சமூகத்துடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில் 2009ல் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து இந்த உள்நாட்டு யுத்தமானது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புடன் முடிவுக்கு வந்தது.

போரை முடிவுக்குக் கொண்டு வந்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றங்கள் முன்வைக்கப்பட்டதுடன், 2015 ஜனவரியில் இந்த அரசாங்கமானது மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட கூட்டணிக் கட்சியின் மூலம் தோற்கடிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பகிர்வதற்கு அனுமதிக்கும் புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவளிக்குமாறு சிறிசேன, சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விட்டுக்கொடுப்புள்ள பண்பைக் கொண்ட 64 வயதானவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவருமான சிறிசேன, சிறிலங்காவில் நல்லதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சமாதானத் தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுப்பாரா என்பதே இங்கு முன்வைக்கப்படும் வினாவாகும்.

‘நாங்கள் மக்கள் மத்தியில் அதிகாரத்தை பகிர்வோம். தமிழ் மக்களுக்குக் கொடுப்பதற்காக சிங்களவர்களிடம் உள்ள எந்தவொரு அதிகாரங்களையும் பறிப்பதற்கு நாங்கள் முயலவில்லை. நாங்கள் எல்லோரும் மேலும் அதிகாரங்களை வழங்குவதற்கான முயற்சிகளையே மேற்கொள்கிறோம்’ என கடந்த வாரம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அதிபர் சிறிசேன தெரிவித்தார்.

சிறிசேனவின் நேர்மையின் மீது எவரும் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் சிறிசேனவிற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு கைநழுவி விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.

‘பொதுக் கோட்பாடுகள் தொடர்பான முக்கிய விவகாரங்கள் மீது உள்ளக உடன்பாட்டை எட்டுவதற்கான தனது இயலாமையை ஆளும் கூட்டணிக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. விட்டுக்கொடுப்புடன் கூடிய உடன்பாடுகள் இன்னமும் எட்டப்படவில்லை’ என கொழும்பிலுள்ள ‘வெறைற்’ என்கின்ற ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் தனது அரசாங்கமானது உண்மை மற்றும் நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான நகர்வுகளையும் முன்னெடுக்கும் என அதிபர் சிறிசேன தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்தது. 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் காணாமற் போயுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். இதன்மூலம் சிறிலங்கா காணாமாற்போனோர் அதிகமுள்ள உலக நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

‘இது மிகவும் கடினமானதொரு பணி என்பது எனக்குத் தெரியும். எனினும் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதென நான் தீர்மானித்தேன். இந்தச் சவாலை முன்னெடுக்கும் போது ஏற்படும் இடர்களைப் பார்த்து அழக்கூடாது. பதிலாக இவற்றை சிரித்தவாறு முகங்கொடுக்க வேண்டும்’ என சிறிசேன தெரிவித்தார்.

‘நான் அவசரப்பட்டு செயற்படுகின்றவன் அல்ல. இது எனது கோட்பாடாகும்.’ என சிறிசேன அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான தமது அதிபர் வேட்பாளராக சிறிசேனவை நியமிப்பதெனக் கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்தன. ‘சிறிசேனவின் மிகவும் எளிமையான பண்பே அவரை அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கான காரணமாகும்’ என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

சிறிசேனவை விடவும் அதிக திறனுள்ள பலர் அதிபர் பதவியைத் திறம்படக் கொண்டு நடத்துவதற்கான தகைமையுடன் இருக்கலாம்.  ஆனால் சிறிலங்காவில் வாழும் தமிழர் மற்றும் முஸ்லீம்கள் போன்ற பல்வேறு தரப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வென்றெடுக்கக்கூடிய ஒரேயொரு தலைவராக சிறிசேனவே உள்ளார்’ என சிறிசேனவைப் போன்று முதன்முதலாக 1989ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

‘சிறிசேன ஒருபோதும் அதிபராக வருவதற்கான குறிக்கோளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் தனிப்பட்ட ரீதியாக அறிந்திருந்தேன்’ என மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

ராஜபக்சவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறிசேன, ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சராகச் செயற்பட்டார். அத்துடன் மகிந்த ராஜபக்சவின் கட்சியின் பொதுச் செயலராகவும் சிறிசேன 13 ஆண்டுகள் கடமையாற்றினார். இவர் தனது அரசியல் வாழ்வை ஒரு பொதுவுடமைவாதியாக ஆரம்பித்தார். இன்றும் இவர் கார்ல் மாக்சின் கோட்பாடுகளையே பின்பற்றுகிறார். இவரது வீட்டில் கார்ல் மாக்சின் ஒளிப்படம் தொங்கவிடப்பட்டுள்ளது.

சிறிசேனவை  அதிபர் வேட்பாளராக ஆதரிக்குமாறு தன்னிடம் கேட்ட போது, ஒரு சில வார்த்தைகளை மட்டும் கதைக்கின்ற எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கின்ற பிரபலமற்ற ஒரு அரசியல்வாதியாகவே தனக்கு சிறிசேனவைத் தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘ஆனால் புதிய அரசியல் யாப்புத் தொடர்பான கருத்துக்களைத் தெரிவுக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்ட பின்னர், புதிய அரசியல் யாப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பது தொடர்பாக சிறிசேன சாதுரியமாகப் பதிலளித்த போது நான் அவரது ஆற்றலைப் பார்த்து வியந்து நின்றேன்’ என சுமந்திரன் தெரிவித்தார்.

‘இனப்பிரச்சினை தொடர்பாக புதிய அரசியல் யாப்பை வரைவதற்காக சிறிசேன எடுத்துள்ள நகர்வுகளை விட மேலும் பல்வேறு விடயங்களை அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது அவரது அரசியல் முறைமைகள் மீதான நம்பிக்கையை எமக்குத் தந்துள்ளது’ என திரு.சுமந்திரன் தெரிவித்தார்.

தான் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பேன் என சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார். இதற்கமைவாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான சீர்திருத்தத்திற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை சிறிசேன வென்றெடுத்தார்.

‘அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை அவசரப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என நான் விரும்பவில்லை. நாங்கள் இதனை அவசர அவசரமாகச் செய்தால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கான திட்டங்கள் தீட்டப்படலாம்’  என சிறிசேன தெரிவித்தார்.

‘ஆனால் அரசியல் யாப்பு சீர்திருத்த விவகாரத்தை மிகவும் மெதுவாக முன்னெடுக்கும் போது, இதனை மிதவாதிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முனையலாம்’ என வெறைற் என்கின்ற ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

‘சிறிலங்கா அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் காலாதி காலமாக உள்ள பிரச்சினைகளைக் குறிப்பாக அரசியல் அதிகார மாற்றங்களை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கான நிலையை உருவாக்கவும் வழிவகுக்கும்’ என வெறைற் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் போன்றன சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்குவதாகவும், சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்கக் கூடிய சமமான அரசியல் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எவ்வித உறுதியான முயற்சியையும் முன்னெடுக்கவில்லை என வெறைற் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிசேனவின் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜபக்சவின் விசுவாசிகளாக உள்ளதால் சிங்கள மக்களின் மனதை வென்றெடுப்பதென்பது சிறிசேனவிற்குக் கடினமான ஒன்றாகவே உள்ளது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  சிறிலங்கா அரசாங்கமானது நிராகரிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டது போன்று வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய குழுவானது சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகளை விசாரணை செய்ய வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக்கூறவேண்டிய நிலையில் சிறிசேன உள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

சிறிசேன இந்த விடயத்தில் சாத்தியமான முழுமையான பங்களிப்பை ஆற்றுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம், என கொள்கை மாற்றங்களுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

மக்களின் ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகளை வரும் மாதங்களில் முன்னெடுப்பதற்கு அரசாங்கத் தலைமைகள் தீர்மானித்துள்ளதாகவும், இதன் முதற் கட்டமாக சிங்கள மக்கள் மத்தியில் உள்நாட்டுப் போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை எடுத்துக்கூறும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மேற்கொள்வதெனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமரவீர தெரிவித்தார்.

உண்மையை அறியும் சிங்கள மக்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியல் மாற்றங்களுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் எனத் தாம் நம்புவதாக சமரவீர குறிப்பிட்டார். சிங்களப் பெரும்பான்மை சமூகமானது புதிய அரசியல் யாப்பிற்கு தனது ஆதரவை வழங்கும் என அதிபர் சிறிசேனவும் நம்புகின்றார்.

‘சிங்கள மக்கள் இந்த நாட்டில் சந்தோசமாக வாழ்கிறார். அதேபோன்றே சிறுபான்மை சமூகத்தினரும் இந்த நாட்டில் சந்தோசமாக வாழவேண்டும்’ என அடிக்கடி தனது உரையில் பயன்படுத்தும் வார்த்தையை சிறிசேன மீண்டும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *